பக்கம்:படித்தவள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

ராசீ


கணவனைப் பற்றிப் பேசுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை. கடல் கடந்து காசு ஈட்டச் சென்ற கணவனின் நிலை பற்றிப் பேசினாள். அரபு நாட்டுக்குச் சென்ற வரலாற்றில் பணம் கொடுக்கும் மரபு அடங்கி இருந்ததைச் சுட்டிக் காட்டினாள்.

“பணத்துக்கு இனி குறைவு இருக்காது” என்று தட்டிக் கொடுத்தேன்.

“அதற்கு வாங்கிய கடனே ஐம்பதினாயிரம். அதை அடைக்க முடியாமல் அவதிப்படுகிறோம்” என்று பதில் தந்தாள்.

எனக்கு இந்த அனுபவம் இல்லை; புதுமையாக இருந்தது.

“அவரை அனுப்ப ஏஜெண்டுக்கு ஐம்பதினாயிரம் தர வேண்டி இருந்தது” என்று விளக்கினாள்.

இடைத் தரகர்கள் அடிக்கும் கொள்ளை நெஞ்சை உலுக்கிவிட்டது.

“அங்கே அதிக சம்பளத்துக்கு என்று போகிறார்கள். அதில் பாதி இவர்களுக்குக் கொட்டி அழ வேண்டி இருக்கிறது; அதற்கு வாங்குகிற கடன் அது போடுகிற வட்டி அது குட்டி போட்டுக்கொண்டே போகிறது. அதற்கப்புறம் அவர் திரும்பி வந்து விடுவார். கடைசியில் ஒன்றும் இருக்காது” என்று விளக்கினாள்.

“பின் ஏன் இங்கு இருந்து அவரை அனுப்ப வேண்டும்” என்று கேட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/58&oldid=1139521" இலிருந்து மீள்விக்கப்பட்டது