பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பின்னவர்கள் இரட்டைமலை சீனிவாசனும்,அம்பேத்கரும் இதில் உடன்படவில்லை கடுமையாக எதிர்த்தார்கள் என்பதையும் பதிவு செய்யவேண்டும்.

  • தேர்தல் முறையானது நிலப்பரப்பு அடிப்படையில் அல்லாமல், வகுப்புகளின் நலனை அடிப்படையாகக் கொண்டி ருக்கும். பல்வேறு வகுப்புகள், வர்க்கங்களுக்கு தனி வாக்காளர் தொகுதி (Separate electorate) அல்லது சிறப்பு வாக்களர் தொகுதி (Special electorate) அடிப்படையில் பிரதிநிதிகள் தேர்வு செய்யப் படுவார்கள்.
  • மீதமுள்ளவை பொதுத் தொகுதிகள் (General Electorate) என அழைக்கப்படும். (1983:280)

இந்த திட்டம் தான் மிண்டோ - மார்லி சீர்திருத்தம் என்றும், இந்திய கவுன்சில் சட்டம் 1909 என்றும் அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தை முஸ்லிம் லீக் தவிர பிறர் அனைவரும் எதிர்த்தார்கள். காங்கிரஸில் கோகலே இதை வரவேற்றார். பிரதிநிதித்துவ அரசியலில் மாபெரும் முன்னேற்றம் என்று அவர் வர்ணித்தார் (2006:188)

இத்திட்டம் கடுமையான எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டது. ஆனால் எதிர்ப்பாளர்களின் அப்பட்டமான சாதி உணர்வை, அதிகார வெறியை வெளிச்சம் போட்டு காட்டியது. சாதி இந்து பத்திரிக்கைகள் தமது வெறுப்பை காட்டியதை பற்றி மிக காட்டமாக பதில்களை பண்டிதர் எழுதினார். வங்காள இதழொன்றுக்கு அப்படியான ஒரு பதிலை அளித்தார். நவம்பர் 24, 1909 தமிழன் இதழில்

"இந்தியர்களுக்கு தற்காலம் கொடுத்துள்ள கெளன்சல் மெம்பரை யாங்கள் கேட்கவில்லை. ஐரோப்பியர்கள் இந்தியர்களை சமமாக நடத்தாமல் அதிகேவலமாக நடத்துகிறார்களே அதை நீக்கும் படி கேட்டுள்ளோம்.

அவற்றை இராஜாங்கத்தோர் சீர்திருத்தாது கெளன்சல் மெம்பரை அதிகப்படுத்தினாலும் படுத்திக் கொள்ளட்டும். இந்தியர்களை மட்டிலும் ஐரோப்பியர் சமமாக நடத்த வேண்டுமென்று கேட்கிறீர். அவ்வகை சமரசங்கேட்போர் தென்னிந்தியாவில் பார்ப்பானென்றும் பறையனென்றும் வகுத்துள்ள பொய் சாதிக் கட்டுக்களை ஏன் அகற்றினீரில்லை. பார்ப்பானென்பவனும் இந்து தேச மனித வகுப்பைச் சார்ந்தவன், பறையனென்பவனும் இந்துதேச மனித வகுப்பைச் சார்ந்தவன். இவ்விருவரும் ஒரு தேசக் குடிகளாக இருந்துக் கொண்டு ஒருவர் சுகமடைவதுப் போல் மற்றவர்கள் சுகமடையப் போகாதென்று சகல விஷயங்களிலுந் தாழ்த்தி சீர்கெடுத்து வந்ததையும், வருவதையும் உணராது ஐரோப்பியர்

கௌதம சன்னா / 56