பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 இ. புலவர் கா. கோவிந்தன் ஆங்குக் கொன்னே குவிந்து கிடக்கும் பொருளைக் கொள்ளை கொண்டு வந்து, அவ்விரவலர் கூட்டத்திற்கு வழங்கி அவரை வாழ வைக்கவே துணிவன். அவ்வாறு துணிவதும், அத்துணிவைச் செயல்படுத்துவான் வேண்டி, அச்செல்வம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அரணை அழித்துக் கைப்பற்றக் கருதுவதும் உண்டு. சிந்தை இன்றிச் செயல் எழாது என்ப ஆதலினாலும், செயல் சிந்தையின் விளைவே ஆதலினாலும், அரணைக் கை கொள்ளக்கருதிய அக்கருத்தே அத்திணையின் வித்தாகி முதல் துறையாக இடம் பெற்றது. தம் வாழ்வு வளம் உடையதாக வேண்டிய புலவர்கள் எல்லாம் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனையே அடுத்து நின்றாராக, அவன், அவர்தம் வறுமை தீர்ப்பான் வேண்டித் தன் குலப்பகைவர்களாம் சேர பாண்டியர் நாட்டுச் செல்வ வளங்கள் மீது சிந்தை செலுத்தினன் எனக் கோவூர்க் கிழார் கூறுவது காண்க. "மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி நிலவரை இழிதரும் பல்யாறு போலப் புலவர் எல்லாம் நின் நோக்கினரே, நீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக் கூற்று வெகுண்டன்ன முன்பொடு மாற்றிரு வேந்தர் மண்நோக்கினையே’ - புறம்:42 வெளி நாட்டவர் உள்ளத்தில் தணியாப் பெரு வேட்கையை எழுப்பவல்ல பெருநிதியை ஈட்டி வைத்திருப் பவன் உண்மையில் ஒப்புயர்வற்ற பெருவேந்தனாகவே இருப்பன் ஆதலாலும், அவன் தன் பெருநிதியைக் காக்க மேற்கொண்டிருக்கும் காவல், பிறரால் எளிதில் கடத்தற் கரிய காவலாகவே இருக்கும் ஆதலாலும், அக்காவலைக்