பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்னி புராணம் 379 தவிர, பின்னர் திரும்பிப் பார்க்கவே கூடாது. புறப்பட்ட படைகள் இரண்டு மைல் தூரம் சென்ற பிறகு தங்கி ஒய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். விஷ்ணு முதலானவர்களைத் துதிக்க வேண்டும். அரசன் நேரடியாகப் போர் செய்யக் கூடாது. அவ்வாறு செய்து அரசன் இறக்க நேரிட்டால் போரில் தோற்க வேண்டிவரும். ஒரு யானையைப் பாதுகாக்க நான்கு ரதமும், ஒவ்வொரு ரதத்திற்கும் நான்கு குதிரைப் படைகளும், ஒவ்வொரு குதிரைக்கும் நான்கு காலாட்படை என்ற முறையில் அணிவகுப்பு இருக்கவேண்டும். படையில் முதலில் செல்வது காலாட்படை அடுத்து வில் வீரர். அடுத்து, குதிரைப்படை இவற்றின் பின்னே ரதப்படையும், அதன் பின்னர் யானைப் படையும் செல்ல வேண்டும். படையின் முற்பகுதியில் கோழைகள் இடம் பெறக்கூடாது. அவர்கள் பின்னணியில் நிற்க வேண்டும். தைரியம், வீரம் உடையவர்களே தூசிப் படையில் இருக்க வேண்டும். சூரியன் எதிர்ப்புறமாக இல்லாமல் படைக்குப் பின்புறம் இருக்கின்ற முறையில் போர் புரிய வேண்டும். போரில் உயிர் துறப்பவர் நேரே வீர சுவர்க்கம் போவர். உண்மை வீரர்கள் சிந்தும் இரத்தம், எல்லாக் குற்றங்களையும் கழுவி விடுகிறது. பல யாகங்கள் செய்வதைக் காட்டிலும் போர்க்களத்தில் ஆயுதங்கள் தன்மேல் படுமாறு ஏற்றுக் கொள்வது சிறப்புடையதாகும். போர்க்களத்தில் இருந்து புறமுதுகிட்டு ஒடுதல் ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்தை விட அதிகமாகும். போர் என்பது சம பலம் உடைய இருவரிடையே நடைபெற வேண்டும். புறமுதுகிட்டு ஒடுபவர்கள், வேடிக்கை பார்ப்பவர்கள், ஆயுதம் ஏந்தாமல் போர்க்களத்தில் நிற்போர் என்பவர் மேல் ஆயுதப் பிரயோகம் செய்யக் கூடாது. போரில் பிடிபட்டவர்களைச் சிறையில் வைக்காமல் தன் மக்களைப் போல் நடத்த வேண்டும்.