பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

பதிற்றுப்பத்து தெளிவுரை

சொற்களை வழங்குபவர், இசைக் கருவிகள் கொண்ட பையினைக் கையிற்கொண்டோரான பாணர்கள். அவர்கள். திருத்தமான தம் யாழினை இசைத்து மீட்டியபடியே, ‘இவ்வுலகத்தோரின் நல்வாழ்வின் பொருட்டாக நீ நெடிது வாழ்வாயாக’ என்று பாடிநிற்க, நீதான் எழிலோடும் வீற்றிருக்கும், நின் திருவோலக்க நிலையினையும் கண்டேன், பெருமானே!

இம் மண்ணுலகிலே வாழும் நிலைபெற்ற உயிர்களுக்கெல்லாம் குறைவின்றிக் கொடுத்துக் கொடுத்துக் சைஓய்தல் என்பதே இல்லாத பெருங் கொடையினையும், மிகுதியான வன்மையினையும் உடைமையினாலே, அறிவாலும் ஒழுக்கத்தாலும் உயர்ந்த குடிகட்குப் பெருமையுடைய பொருள்களைத் தந்து இன்பத்தைச் செய்கின்ற திருமாலைப்போல, நல்ல புகழிலே சற்றும் குறைவுபடாத வலிமையினை உடையவனே!

நின் பண்புகள் பலவற்றையும் காணுதற்கு விரும்பிய விருப்பத்தாலேயே, யாமும் மேலே சொல்லப்பட்டவரான நின் பகைவரது, நின்னைப் பகைத்தலாலே அழிவெய்திய நாட்டுப் பகுதிகளையும், நின்னைப் போற்றுதலாலே செழித்து விளங்கும் நாட்டுப் பகுதிகளையும் கண்டோம். அவற்றைச் செய்தருளிய நின்னையும் கண்டு, அந்த இன்பத்தாலே மதி மயங்கியும் போயினோம், பெருமானே! (மதிமயக்கம் பகைவர்க்குச் செய்த கொடுமையையும், நாட்டவர்க்குச் செய்த அருளையும் கருதியதாம்.)

சொற்பொருள் : தலைப்பெயர்தல் - கழிதல். இறுத்தல் - தங்குதல். துன்னல் - நெருங்கிச் சேரல். மரம் - காவற் காட்டிலுள்ள மரங்கள்; கணைய மரமும் ஆம்; கணைய மரமாயின் கோட்டைக் கதவுகளுக்கு வலுவூட்டக் குறுக்காகப் பின்பக்கமாக இடப்பெற்றுள்ள வலிய மரம் எனக் கொள்ளுக. முறுக்கி - அழித்து. ஒழுகல் - ஒன்றன்பின் மற்றொன்றாக இடையீடின்றித் தொடர்ந்து நிரைபடப் போதல். நிரைய வெள்ளம் - நிரையக் காவலர் போன்ற படைப் பெருக்கம்; நிரையக் காவலர் கொள்ளக் கருதிய உயிரைக்கொண்டே மீள்வதுபோலத் தாம் கொள்ளக் கருதிய பகைநாட்டைக் கொண்டே மீளும் படைப் பெருக்கம் என்க. நிரைய வெள்ளம் - நிரை நிரையாக, அணியணியாக, வரிசைப்படச் செல்லும் தானைப் பெருக்கமும் ஆம்.