46
பதிற்றுப்பத்து தெளிவுரை
ஒழுக்கச் செவ்வியாலே நிரையஞ் செல்லாதவாறு தடுத்துக் கொண்ட புரையோர் - உயர்ந்தோர். நோய் - நோயும் பசியும். யாணர் - புது வருவாய். மதிமருளல் - மதி மயங்குதல்; ஆனந்த மிகுதியாலே மயங்கி நிற்றல். மண்ணுடை ஞாலம் - மண்ணணுச் செறிவாலே அமைந்த நிலவுலகம். எஞ்சாது - எதையும் தனக்கென மறைத்து வைத்துப் பேணியிராது. ஏமம் - இன்பம். நெடியோன் - திருமால். மைந்து - வலிமை.
விளக்கம் : சேரலாதனின் பேராண்மையினை அவனைப் பகைத்ததனாலே அழிபாட்டை அடைந்த நாட்டின் நிலையைக் கூறுவதனாலும், அவனது செங்கோன்மையினை அவன் நாட்டது பெருவளத்தை உரைப்பதனாலும் எடுத்துக் கூறினர்.
பழைமையான வீட்டது அழிவடைந்த காட்சி சிறந்த சொல்லோவியம் ஆகும். ‘உண்டு உறை மாறிய மழலை’ என்றது, கள்ளுண்டலினாலெ பேச்சு மாறுபட்ட பொருளற்ற சொற்கள் என்றதாம்.
வென்றி வேந்தன் தன் நாட்டிற்கு மீண்டதும், தன் படைமறவர்க்கும் பிறர்க்கும் தான் திறைகொண்ட பெரும் பொருளையும் வழங்கிவருதல் பழந்தமிழர் அரசர் மரபு. அதனைப் பெறுகின்ற மறவர்கள் கடைத்தெருக்களிலே கூடித் தாந்தாம் விரும்பியவற்றை விலைக்குக் கொள்ளுவர் என்று அறிதல் வேண்டும்.
‘நெடியோன் அன்ன நல்லிசை ஒடியா மைந்த’ எனச் சேரலாதனைத் திருமாலுக்கு ஒப்பிட்டனர். காவல் தொழிலினனான திருமாலையொட்டிக் காவற் பணிபூண்ட மன்னர் மரபினரை எல்லாம் திருமாலின் அம்சமாகக் கொள்வது பண்டைய மரபு.
‘சீர்கெழு விழவின் நெடியோன்’ என்பது கடலிடைச் சூரனை வென்று, சீர்கெழு செந்திற்பதியிலே வீற்றிருக்கும் குமரவேளையும் குறிப்பதாகலாம்.