பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
132

சென்ற நூற்றாண்டு வரையில் தத்தம் கருத்தைச் செவி வழியாகப் பரப்பி வந்தவருக்கு, ‘அச்சுயந்திர சாதனம்’ கிடைத்தமையின் அதன் வழியாக, தத்தம் சமய உண்மைகளைத் தாங்கியனவாக நூலாகவும் இதழாகவும் பலப்பல வெளியிட வாய்ப்பு உண்டாயிற்று, அவர் தம் சமயம் பரப்பும் ஆர்வத்தில் ஒருவரை ஒருவர் பழிக்கவும் தூற்றவும் தத்தம் கொள்கைகளை உயர்த்திப் பேசவும்.பிறர் கொள்கைகளைத் தாழ்த்தித் தூற்றவும் பின்வாங்கவில்லை. இந்தக் கொடும் அடிப்படையில் உண்டான நூல்களும் பல. ‘தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறை’ என்ற சமய உணர்வைப் பரப்பிய தமிழ் நாட்டில் இத்தகைய மாறுபாட்டுக் கொள்கை எப்படித்தான் புகுந்ததோ என நினைத்துப் பார்க்கவும் கூடவில்லை. வேதாந்த சித்தாந்த வேற்றுமை, சைவ வைணவ வேறுபாடு, கிறித்தவ இசுலாமிய வேறுபாடு எனப் பலவகையில் சமய வேறுபாட்டுக் கொள்கைகளை விளக்கவும் கண்டிக்கவும் தக்கதான வகையில் சென்ற நூற்றாண்டில் பல நூல்கள் எழுந்தன. இவர்களுக்கிடையில் இராமலிங்கர் முதலியவர் தோன்றிச் சமரச சமய நெறி’ யைப் பரப்பவும் பாடுபட்டனர். அக்கொள்கைகள் பற்றிய நூல்களில் பெரும்பாலன தமிழ் உரைநடையிலேயே உள்ளன. புதிதாக வந்த கிறித்தவ சமயத்தார் தம் சமய உண்மைகளை விளக்கப் பலப்பல வகையில் புதுப்புது நூல்களை வெளியிட்டனர். அச்சமயத்து இருவேறு கொள்கை யாளர்களும்–புரோட்டஸ்டண்டு, கத்தோலிக்கக் கொள்கையாளர் இருவரும்-அவரவர் கொள்கைப்படி பல்வேறு நூல்களை எழுதியதோடு மட்டுமன்றி, விவிலிய நூலைப் பலவகைகளில் மொழிபெயர்த்தும் இயேசு வரலாற்றைப் பலவகைகளில் எழுதியும் தத்தம் கொள்கைகளைப் பரப்ப முயன்றனர். அவர்தம் கொள்கை வேறுபாடுகளைப்பற்றி எழுந்த நூல்களும் சில இருந்தன எனக் காண்கிறோம். மேலை நாட்டிலிருந்து இங்கு வந்த கிறித்தவப் பாதிரிமார்களும் அவர்களுக்கு உடன் துணையாக வந்த பலரும், ஆட்சிப்பீடத்தில் அமர்ந்து ஆணை செலுத்திய பல கிறித்தவ