பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
139
அது கல்வி யறிவு ஒழுக்கங்களால் ஆன்ற பெரியோர்களுடைய உள்ளத்தில் தலைப்படினும். அவ்வுள்ளமானது தான் செல்லத்தகும் இடம் இது எனவும் செல்லத்தகாத இடம் இது எனவும், ஆராயவிடாது. அது மேலிடும்பொழுது குணமும் குலமும் ஒழுக்கமும் குன்றுதலையும், பழியும் பாவமும் விளைதலையும் சிறிதும் சிந்திக்க விடாது. அக்காமே கொலை, களவு, கள்ளுண்டல் முதலிய பாபங்களுக்கெல்லாம் காரணமாய் உள்ளது. ஆதலால் அக்காமமே ஆன்மாக்களை நரகங்களிலே எண்ணிறந்த காலம் வீழ்த்தி வருத்தும் பெருங் கொடுமையுடையது. (பிரமாணம் பல)...ஆதலால் காமம் மனசிலே சிறிதாயினும் எழவொட்டாமல் அடக்கவேண்டும்.

ஆறுமுக நாவலால் சமயம் பற்றியும் மொழிபற்றியும் பலநூல்கள் எழுதியுள்ளார். அவை பயில்வோர் தகுதிக்கு ஏற்ற நடையில் செல்லுகின்றன. அவர் பிள்ளைகளுக்கு என எழுதிய பால பாடத்திலிருந்து ஒரு பகுதியைக் கண்டு மேலே செல்லலாம்.

களவு: களாவது பிறருடைமையாயிருக்கும் பொருளை அவரை வஞ்சித்துக் கொள்ளுதல். களவினால் வரும் பொருள் வளர்வது போலத் தோன்றி, தாம் போம்போது பாவத்தையும் பழியையும் நிறுத்திவிட்டு, முன்னுள்ள பொருளையும் தருமத்தையும் உடன் கொண்டு போய்விடும். களவு செய்பவர், அப்பொழுது ‘யாவராயினும் காண்பரோ அடிப்பரோ கைகால்களைக் குறைப்பரோ’ என்றும், பின்பும், 'இராசா அறிந்து தண்டிப்பானோ’ என்றும் பயந்து பயந்து மனந்திடுக்குறுதலின், எந்நாளும் மனத்துயரமே உடையவராவர். அறியாமையினலே களவு அப்போது இனிது போலத் தோன்றினும், பின்பு தொலையாத துயரத்தையே கொடுக்கும்.