பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
22

நடை 'உரைநடை'யேயாயினும் அது இலக்கிய உரைநடையாகவோ, காலத்தை வென்று கவிதையென வாழும் உரைநடையாகவோ இருக்க வழியில்லை. அத்தகைய உரைநடை, நம்முன் நிற்கும் கடந்த ஒரு நூற்றண்டில் பலவகையில் வளர்ந்துள்ளது. (அவற்றையே அடுத்த நாட்களில் விளக்கமாகக் காண இருக்கின்றாேம்.) எனினும், சிலம்பினை நோக்கும்போது அதன் உரையைப் பற்றி ஆராயும் நமக்கு அவையும் தேவையானமையின் அவைபற்றி ஆங்காங்கே காணலாம்.


சிலப்பதிகாரத்தின் தொடக்கத்திலே அதன் உரை மணம் கமழ்கின்றது. அந்த உரைநடை, பாட்டினும் கடினமானது போன்று காட்சியளிக்கின்றது. சிலம்பின் அகவலை அறிந்து உணர்வதிலும் உரைநடையை உணர்வது கடினமே எனவும் நினைக்க வேண்டியுள்ளது. எனினும், அவ்வுரையின் ஏற்றத்தையும் ஏறுபோற் பீடுநடையிட்டுப் பெருமை பெற்றுச் சிறப்பதையும் என்றென்றும் நம்மால் மறக்க இயலாதே. இளங்கோவடிகள் வாக்கில் ஒன்று காணல் பொருந்துவதாகும். அதுவும் விழாவோடு பொருந்தியதாக நாட்டை வளங்கொழிக்க வழிகாட்டுவதாக அமையட்டும். ‘உரை பெறு கட்டுரை’ என்ற தலைப்பிலே கண்ணகிக்கு விழா ஆற்ற, முடியுடை வேந்தர் மட்டு மன்றிப் பிறநாட்டவரும் பத்தினித் தெய்வத்தைப் பரவிப் பயன் பெற்ற வகையைக் கூறுவது அது. இதோ அவர் வாக்கை நீங்களே கேளுங்கள்.


"அன்றுதொட்டுப் பாண்டிய நாடு, மழை வளம் கரந்து, வறுமை எய்தி, வெப்பு நோயும் குருவும் தொடரக் கொற்கையில் இருந்த வெற்றி வேற்செழியன் நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய, நாடு மலிய மழைபெய்து நோயும் துன்பமும் நீங்கிற்று.

அதுகேட்டு, கொங்கிளங் கோசர், தங்கள் நாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய மழை தொழில் என்றும் மாறாதாயிற்று.