பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
35

அதன் காரணத்தாலேதான் அவை இத்துணை விரைவில் வழக்கொழியத் தொடங்கிவிட்டனவோ என நினைக்க வேண்டியுள்ளது. அக்காலத்தில் கல்லாடத்துக்கு உரை எழுதிய மயிலேறும் பெருமாள் என்பவரும் வாழ்ந்திருந்தனர். அவர்கள் உரைகளையெல்லாம் ஈண்டு விளக்கத் தேவையில்லை. அக்காலத்தை ஒட்டி வாழ்ந்த சங்கர நமச்சிவாயர் நன்னூலுக்குச் சிறந்த உரை கண்டுள்ளனர். இவை அனைத்தும் தமிழ் உரைநடைக்கு ஊற்றமாக இருந்தன எனக் கொள்வதில் தவறு இல்லை.

மேலை நாட்டார்

அடுத்து வரும் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மேலை நாட்டு மக்கள் நம் நாட்டில் வாணிபத்தின் பொருட்டும் அடுத்து ஆட்சி செய்தற் பொருட்டும் காலூன்றி வளர ஆரம்பித்த காலம் அது. அவற்றுடன் அம்மேலை நாட்டிலிருந்து கிறத்தவ சமயத்தைப் பரப்ப வந்த பாதிரியர் சிலர், தம்நாட்டு நிலையையையும் வாழ்வையும் விட்டு, தமிழ் நாட்டு அற வாழ்வின் அடிப்படையில் மக்களொடு மக்களாய் வாழ்ந்து, ஏழைகளொடு ஏழைகளாக நின்று அவர்களிடையில் தம் சமயத்தைப் பரப்பினர். அவர்கள் தமிழையும் நன்கு கற்று, தமிழிலே மக்களோடு கலந்து உறவாடி, தமிழில்-உரைநடையிலும் பாட்டிலும்-இலக்கியங்களையும் தம் சமய உண்மைகளையும் எழுதி வைத்துள்ளனர். அத்தகைய மேலைநாட்டு அறிஞருள் அக்காலத்தவர்களாகச் சிறந்த வகையில் போற்றத்தக்கவர் ராபர்ட்-டி-நோபிலி என்ற இயற் பெயருடைய தத்துவ போதகரும், பெஸ்கி என்ற வீரமாமுனிவரும் ஆவர். அவர்கள் தமிழ் உரைநடையை வளர்த்த பெருமைக்கு உரியவர்கள் என்றும் சொல்லலாம். அவர்தம் உரைநடையில் வடமொழி அதிகமாக விரவிக் காண்கின்ற காரணத்தால், அவர்கள் இந்நாட்டில் கோயில்களில் வாழ்ந்த அர்ச்சகர் போன்று தாமும் வாழ நினைத்தார்கள் எனக் கொள்ள இடமுண்டு அப்படியே போதகர், முனிவர் என்ற பெயர்களையும்