பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
53

இவர் போன்றாேர்—சிறப்பாக கால்டுவெல், போப், வீரமா முனிவர், சீகன்பால்கு முதலியோரால் தமிழின் சிறப்பு, தொன்மை, வளன். வற்றாநிலை பற்றியும் அறிந்துகொள்ள முடிகின்றது. இவர்களைப் பற்றியெல்லாம் தொடர்ந்து காண இருக்கின்றாேமாதலின் இன்று இந்த அளவில் இவர்களைப்பற்றி நின்று மேலே செல்லலாம்.

மேலை நாட்டு ஆட்சியாளர்கள் தமிழ் நாட்டில் மட்டுமன்றித் தமிழர் பெரும்பான்மையினராக வாழ்ந்த இலங்கை, மலேயா முதலிய பகுதிகளிலும் தமிழில் அறிக்கை முதலியவற்றை வெளியிட்டனர். இலங்கை அறிக்கை ஒன்றை முன்னரே கண்டோம். மற்றும் இரயில்வே, தபால், தந்தி முதலிய வசதிகள் உண்டான காரணமும் கடந்த நூற்றாண்டில் உண்டான பல்வேறு நாட்டு, சமுதாய மாறுதல்களும் தமிழ் உரைநடை வளர உதவின. மேலை நாட்டினர் வாணிபம், தொழில், வங்கி (பணவகம்) முதலியன வளர்த்த காரணத்தாலும் எடை (நிறுத்தல், முகத்தல்), அளவு, நாள் காட்டி, பஞ்சாங்கம், நாணயம் முதலியன நாட்டு நிலைக்கேற்ப அமைந்த புழக்கத்தில் வந்து விட்டதாலும் அவ்வத்துறை பற்றிய தமிழ் அறிக்கைகள் வெளி வரக் காரணமாயின; அவையும் பெரும்பாலும் உரைநடையிலேயே அமைந்தன. இவையெல்லாம் திப்புசுல்தான் காலத்திலும் அதற்கு முன்பும் இருந்தன வென்றாலும், 1799-இல் சரபோசி-வெல்லஸ்லியின் தஞ்சை ஒப்பந்தத்துக்குப் பிறகே—தமிழ் நாட்டின் பெரும்பகுதி ஆங்கிலக் கம்பெனி ஆட்சிக்கு வந்த பிறகே —செப்பம் செய்யப் பெற்றன; இவற்றுடன் அறங்கூறு அவையங்களாகிய நீதி மன்றங்களும், நாட்டாட்சி, ஊராட்சி, நகராட்சி மன்றங்களும் தோன்றி வளர்ந்து நிலைபெற்ற காரணத்தால் அவ்வத்துறை பற்றிய அறிக்கைகள், விண்ணப்பங்கள், விளக்கங்கள் முதலியன தமிழ் உரை நடையில் தோன்ற, உரைநடை வளர்ச்சி பெற்றது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாட்டு மக்களோடு பழகிய மேலை நாட்டார்–சிறப்பாக ஆங்கிலே