பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
61

களிலும் அறிவும் விளக்கமும் பெற்ற அறிஞர் ‘தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற உணர்வில் தத்தம் கருத்தை ஏட்டில் வடித்து அச்சுப் பொறியின் துணையால் நாட்டில் உலவ விட்டனர். (அந்நூல்களின் சொற்களை விளக்கும் அகராதிகளும் அக்காலத்தில் வெளி வந்தன.) அவை மக்கள் மனத்தை-பெரும்பாலும் பொதுமக்கள் மனத்தை-கவரும் வகையில் அமைய வேண்டுமென முயன்றமையால் அவ்வாசிரியர்கள் பெரும்பாலானவற்றை உரைநடையிலேயே எழுதி வெளியிட்டுள்ளனர். கிராமங்களில் வழங்கும் சிறுகதைகள், கற்பனைக் கதைகள், கதைப் பாட்டுகள், வேடிக்கை விடுகதைகள், நல்லதங்காள் கதை முதலியன பாட்டா உரையா எனப் பகுக்க முடியாதவை என எத்தனையோ வகையில் தமிழ்நாட்டு மூலைமுடுக்குகளிலெல்லாம், தமிழில் எழுதி வெளியிட்ட நூல்கள் சென்று, சென்ற நூற்றாண்டில் உலாக் கொண்டன. அவற்றுள் சிலவே நாம் இன்று பெற்றிருக்கின்றாேம். இன்றும் பெறாத எத்தனையோ கேட்டறியாக் கிராமங்களின் பரண்களில் படுத்து உறங்கிக் கிடக்கின்றன. பல செல்லுக்கும் செல்லும் வெள்ளத்திற்கும் இலக்காயின. இவற்றின் அருமை பெருமைகளை உணராத பல்லோர், கிராமங்களில் வெள்ளக் காலங்களில் இந்த ஏடுகளை ஆற்று நீரில் ஆழ்த்தி, விடுதலை தந்து அனுப்பி விடுவார். இத்துறையில் பல வகையில் ஆராய அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.