பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
68

அவை அனைத்தும் (மிகச் சில தவிர்த்து) உரைநடையில் உள்ளமையின் நமது ஆய்விடையில் இடம் பெறுகின்றன. அவற்றால் நாம் வெறும் உரைடையைப் பற்றி மட்டும் அறியவில்லை. அத்துடன் அக்காலப் பழக்கவழக்கங்களையும் மொழி அமைப்பு, பிறமொழிக் கலப்பு, கொச்சை வழக்கின் அளவு முதலிய பலவற்றையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

ஜான் மொர்டாக் பணி

இத்துறையில் சென்ற நூற்றாண்டு பாடுபட்ட அறிஞர்கள் பலர் என்றாேம். அவர்கள் அனைவரைப்பற்றியும் எண்ணவும் எழுதவும் நமக்கு நேரமும் இடமும் இல்லை. எனவே அவருள் சிறந்தவராகிய மெக்கன்சி பற்றியே குறிப்பிட்டேன். அவர்தம் தொகுப்பனைத்தும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாட்டில்வாழ்ந்தன பற்றியனவேயாம். இதே துறையில் சென்ற நூற்றாண்டின் இடைகாலத்தில் அயராது உழைத்த மற்றெருவரை இங்கே எண்ணிப் பார்த்தல் சாலும் எனக் கருதுகிறேன். அவரே ஜான் மொர் டாக் (John Mordoch) என்பவர். இற்றைக்குச்சரியாக ஒரு நூற்றாண்டுக்கு முன், 1865-இல், நாட்டில் தமிழ்மொழியில் அச்சேறி வெளிவந்த நூல்களையெல்லாம் தொகுத்து, அத்தொகுதிக்குத் தெளிந்த தேவையான ஒரு முன்னுரையையும் எழுதி அவர் வெளியிட்டுள்ளார். எனவே, சென்ற நூற்றாண்டின் இடைக்காலத்தில் எழுதப்பெற்ற தமிழ் நூல் பற்றிய விளக்கம் தரும் ஒரு நல்ல விளக்காக இவர் தம் தொகுப்பு அமைகின்றது. 'கிறித்தவக் கீழ்த்திசைக் கல்விக் குழு’ என்ற அமைப்பின் முயற்சியால் சென்னையில் இவர்தம் நூல் 1865-இல் வெளியாயிற்று. இதில் பல துறைகளும் நன்கு பகுக்கப் பெற்று ஒவ்வொன்றிலும் வெளியான நூல்களைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. முதலில் ‘சமயம்’ என்ற தலைப்பிலும், பின் பிற தலைப்புகளிலும், அவை உள்ளன. 1755 நூல்கள் இத்தொகுப்பில் உள்ளன.