பக்கம்:பனித்துளி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பனித்துளி

9

 “ராஜம்பேட்டைக்குத் தான் அப்பாவும் போய் இருக்கிறார். அநேகமாக நீங்கள் அவரை அங்கேயே சந்தித்தாலும் சந்திக்கலாம்” என்றாள்.

அவள் இவ்விதம் கூறினதும் சங்கரன் போய் விட்டான். நடேச சர்மாவைப் பற்றி ராமபத்திரய்யர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தது காமுவின் நினைவுக்கு வந்தது.

பால்யத்தில் இருவரும் ஒன்றாகக் கல்வி பயின்றவர்கள். இருவரும் ஒரே மாதிரிதான் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்து, அப்புறம் ஹைஸ்கூலுக்குப் போய்ப் படித்தார்கள். ஆனால், நடேச சர்மா கலாசாலைப் படிப்புகள் படித்து உயர்ந்த பட்டம் பெற்றார். ராமபத்திரய்யர் கலாசாலைப் பக்கம் கூடத் திரும்பிப் பார்க்க முடியாமல் அவருடைய குடும்ப நிலை குறுக்கிட்டது. பள்ளிக்கூட வாத்தியார் வேலை ஏற்றதுமே வறுமையும் தானாவே அவரைத் தேடி வந்தது. அவருடைய மூத்த பெண்கள் இரண்டு பேர் கல்யாணமாகிக் குடியும் குடித்தனமுமாக வெளியூரில் இருந்தார்கள். அவர்கள் அப்பாவிடம் தங்களுக்கு ‘இது வேண்டும், அது வேண்டும்’ என்று கேட்பதில்லை. அவர்களைப் பற்றி ராமபத்திரய்யரும் கவலைப்படுவதில்லை. காமுவின் விவாகத்தை பற்றி தான் ராமபத்திரய்யரும், அவர் மனைவி விசாலாட்சியும் கவலைப்பட்டனர்.

காமுவின் ஜாதகம் நல்ல கயோ ஜாதகம் என்று ஜோஸ்யர் மணி அடிக்கடி கூறி வந்தார். அது எவ்வளவு தூரம் உண்மை என்பது பகவானுக்குத்தான் தெரியும். அவ்வளவு யோகமுள்ள ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் நிறைந்திருந்தது. நல்ல மரத்தில் ஏற்படும் புல்லுருவியைப் போல, மனிதருடைய வாழ்க்கைக்கும். செவ்வாய் என்கிற கிரகத்துக்கும் எவ்வளவு தூரம் சம்பந்தம் இருக்கிறது என்பது புரியாத விஷயந்தான். ஆனால், ஜனங்கள் அதை நம்பினார்கள். ராமபத்திரய்யரும் நம்பினார்.

அன்றும், காமுவின் ஜாதகத்தில் குருபலன் ஏற்பட்டிருக்கிறதா? இந்த வருஷமாவது அவளுக்குக் கல்யாணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/11&oldid=1156062" இலிருந்து மீள்விக்கப்பட்டது