பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

பன்னிரு திருமுறை வரலாறு


கும் பாடல், திருப்பெருந்துறையிற் சிவபெருமான் குருவாக எழுந்தருளித் தம்மை ஆண்டு கொண்டருளிய திறத்தை அடிகள் பரவிப் போற்றும் நிலையில் அமைந்துளது. விண்ணகத் தேவரும் நண்ணுதற்கரிய விழுப்பொருளாகிய சிவபெருமான், தம் கண்ணகத்தே நின்று களிதரு தேனுக எழுந்தருளிய சீர்த்தியினையும், நாம் வாழும் உலகமாகிய இப் பூமி சிவன் உய்யக்கொள்கின்ற நெறியாகத் திகழும் சிறப் பினையும் ஒன்பது, பத்தாம் பாடல்களில் அடிகள் குறித்துப் போற்றியுள்ளமை பாடி மகிழத் தக்கதாகும்.

உக. கோயில் மூத்த திருப்பதிகம்

"உடையாள் உன்றன் நடுவிருக்கும்” எனத்தொடங்கும் இத்திருப்பதிகம், தில்லைச் சிற்றம்பலத்தில் அருட்கூத்து இயற்றும் இறைவனது தொன்மை வாய்ந்த பொருள் சேர் புகழ்த் திறத்தை விரித்துரைக்கும் பெருமையுடைய திருப் பதிகமாதலின், கோயில் மூத்த திருப்பதிகம் ` என வழங்கப் பெறுவதாயிற்று. காரைக்காலம்மையார் அருளிய திருவாலங் காட்டு மூத்த திருப்பதிகத்தினைப் போன்று, கோயில் எனச் சிறப்பிக்கப்பெறும் தில்லைச் சிற்றம்பலத்தைத் திருவாதவூர் அடிகள் பரவிப் போற்றிய இத்திருப்பதிகமும் பொருளால் முதன்மையுடையதாக அமைந்திருத்தலால் கோயில் மூத்த திருப்பதிகம் என்னும் பெயருடையதாயிற்று எனக் கருது தல் பொருந்தும்.

இது, தில்லையில் அருளிச் செய்யப் பெற்றதென்பது, கோயில் மூத்த திருப்பதிகம் சிதம்பரத்தில் அருளடையுங் குறிப்பதாகும் ' என வரும் திருப்பெருந்துறைப் புராணத் தொடரால் அறியலாம். இப்பதிகப் பாடல்கள் பத்தும் அந்தாதியாகத் தொடர்ந்தமைந்துள்ளன. இதற்கு அநாதி யாகிய சற்காரியம்' என முன்னேர் கருத்துரைப்பர். எல்லை யறிய வொண்ணுத தொல்லைநாள் தொட்டு இறைவன் உள் பொருளாகிய உலகுயிர்களைச் செயற்படுத்தி அருளும் முறைமையினை அறிவுறுத்தும் நிலையில் இப்பதிகம் அமைந் திருத்தல் கூர்ந்து நோக்கத் தக்கதாகும்.

இப்பதிகத்திற்குச் சத்தியும் சிவமும் ஒத்திரு பாலுற முத்தியாகும் முறைமையருளிய உண்மை எனக் கருத்து உரைப்புர் சீகாழித் தாண்டவராயர். பொன்னம்பலத்திலே திருக்கூத்தியற்றியருளும் எம்பெருமானே! என்ன அடிமை