89
சேத்திரம் தோறும் நீபோய்ச்
சேவைசா தித்து மென்னாம்;
தோத்திரம் தொடர்ந்து பாடித்
தொழுதுதா னென்னாம்! தூ,தூ!
'ஆத்திரக் காரன் புத்தி
அரைப்புத்தி' யென்னாம் ஆதிச்
சாத்திரம்! சரி,யித் தோடுன்
சங்காத்த மென்ற தாம்புல்.
கலையிலே கரையைக் கண்டு,
கண்கட்டு வித்தை காட்டும்
நிலையிலே யிருந்த புல்லின்
நினைவின்ன தெனவோ ராதால்,
மலையிலே யிருந்து ருண்டு
மண்கண்டும் மயங்கா ணாதே
அலையிலே விழுந்து மோதி
யலைப்புண்ட தாயிற் றன்றே.
முப்பது முப்ப தொன்றி
முழுத்திங்க ளிரண்டா யும்,நீ
செப்பாது மறைந்து சென்றென்
சிந்தைநோய் செய்த தால்,பின்
துப்பவும் தோன்றா தாகித்
துணியவும் தோன்றா தாகித்
தப்பது நேர்ந்து, தந்த
தடுமாற்ற மென்ற தாமால்!
வித்திலே யிருந்து தோன்றி
விண்முட்டி விழுதும் விட்டுச்
சொத்திலே மிகுந்தோ ரொப்பச்
சுகமாக வாழ்ந்தும் சொன்னாய்!
சத்திலே குறைந்த சொல்தான்
சாரமில் லாது! சார்ந்து
பத்திலே விழுந்தால் சின்னப்
பாம்பும்தப் பிப்போ' மென்பர்!