94
போதொன்றித் தனது போக்கில்
புவியொன்றி வாழு மாலின்
காதொன்றச் சுவர்க்க பாசம்
கழலாமல் மாட்டி வைத்துத்
தீதொன்று மறியா வாறாய்த்
தினந்தினம் தவணை யோட்டின்,
யாதென்று பகர்வ திந்த
அறுகம்புல் லகம்பா வத்தை!
‘அட்டது பசும்பா லேனும்
அதுராகு கால மாயின்
‘சுட்டது நெருப்பென் றெள்ளிச்
'சொய்'யெனப் பொங்கிப் போகும்!
தொட்டது துலங்கா தெட்டில்
தோன்றிடின் சனியும்! தொட்டு
நட்டது நவமி யாயின்
நாற்றெலாம் நாச' மென்னும்.
நாள்தவ றாது வந்து
நலந்தானே' யெனும்,பஞ் சாங்கத்
தாள்தவ றாது தள்ளித்
தனிநாளின் றாகா' தென்னும்;
‘ஆள்தவ றாது, கோள்கள்
ஆட்கொண்ட வாறே நாளும்
ஊழ்தவ றாது நல்கும்
உயர்வு தாழ் வுலகி' லென்னும்!
நோலாமல், நோற்கச் சொல்லி
நூறுநாள் காக்க வைத்திவ்
வாலாம ரத்தின் துன்பம்
'அலைகட லாயிற்' றென்ன,
மேலாமந் நாள் கோள் செய்யும்
மேன்மைகீழ் மைகளைப் பேசி
யேலாமல், வீணாய்க் காலம்
ஏமாற்றிக் கடத்திற் றாம்புல்!