93
தாயினும் பரிவு கூர்ந்து
தமிழிலே பன்னிச் சொல்வே
மாயினும், இவைக ளின்றிவ்
வவனியி லெடுப டாது;
'காயினும் சரி!நாம் கல்லுக்
கடவுளை வணங்கிக் காலம்
தேயினும், சுவர்க்கம் புக்குத்
திளைக்கலா' மெனுமித் தேசம்...
நச்சிலை வேல்கண் நங்கை
நகைமுகம் வேறாய், நச்சி
யிச்சொலைக் கேட்க நான்வந்
திங்கமர்ந் திருக்க வில்லை;
பச்சிலை யாலும், மற்றப்
பைம்புல்லும் படைத்துக் கூறும்
அச்சொலைத் தயவு கூர்ந்தின்
றறிவிப்பீ ரகத்தீ ரென்றாள்.
'அகத்தீரே' என்ற ழைத்த
அருமந்த - அன்புச் சொல்லால்
முகத்தூறும் முறுவ லோடும்
மொழிந்தேன்நான் தொடர்ந்து முற்றும்
பகுத்தோராப் பாரில், சென்ற
பல்லாண்டு காலம் வாழ்வில்
சுகித்தோர்தாம் யாரே? சூதுச்
சுயநலஞ் சூழ்வோ ரன்றி!
வேலிக்கு வெளியே, வேண்ட
வெகுவாக வளர்ந்தும், வெய்யில்
சாலைக்கு நிழலைச் செய்தும்,
சாத்திர மறிந்த புல்,தன்
காலுக்குப் பூசை செய்யக்
காத்துக் கொண்டிருக்க வைத்தவ்
வாலுக்குத் தந்த துன்பம்
அளந்தெவர் சொல்ல வல்லோர்!