24
“சிங்கத்தின் முழையோ, சின்னஞ்
சிறுநரிக் குழியோ, — சேர்ந்தாங்
கெங்கது தங்கி னேமுற்
றிருக்கலா மென்றெண் ணிற்றே
அங்குதான் தங்கித் தீரும்,
அலட்டிக்கொள் ளாதீர் நீரும்!
உங்களுக் குள்ளம் கொள்ள
வுரைக்கும்போ தொன்றுண்” டென்றள்.
“குவியாகி யரும்பிக் கோலங்
கொண்டவர் குறிஞ்சிப் பூவும்,
அவியாகிக் கமழா தேனும்
அருமைத்தே னுதவ வார்ந்தே
கவியாகிக் கருவண் டுள்ளம்
களிப்புற்றுக் கருதிக் கானம்
செவியாகிப் பருகச் செய்தும்
சிந்தையைக் கவர்வ தன்றே?
வரம்புற்ற வாய்க்கால் நீரே
வயிறரப் பருக வாய்த்தாங்
கிரும்புற்ற வாறய்க் கீழ்மே
லிறுகவே, நீண்டு முற்றிப்
பெறும்பற்று கொண்டு தம்மைப்
பேணிக்காத் தோர்கட் கீயும்
கரும்புற்ற சாறும், கண்டார்
கருத்தினைக் கவர்வ தன்றே?
கற்கண்டே, கனியின் சாறே,
கமலமே, கமலத் தேறல்
சொற்கண்ட கவிதை யே,நற்
சுரும்பின் னிசையே! சூழ்ந்திவ்
விற்கொண்டு கண்முன் நீயும்
எழிலாக இயங்கின், நாளும்
நிற்கண்டு கொண்டென் நெஞ்சும்
நேர்கொண்ட நெறிநீங் காதோ?