18. கற்பென்னும் திண்மை
மாதினிவ் வாய்ச்சொல், மாந்தும்
மகத்தான அமிழ்த மாகிக்
காதினிற் புகவே நானும்
கழிபெருங் கனிவி னேடும்,
“வேதனைப் படவேண் டாம்நீ ;
விரும்பிநா னுன்னைக் கொஞ்சம்
சோதனை செய்தேன், மற்றுன்
சுயத்திறன் துணிதற் கன்பே !
அயர்வினை யாற்றிக் கொள்ளென்
அகத்துறு மறிவே ! ஆய்ந்திவ்
வுயர்வினைக் கவிதை யாக்கி
யுலகினுக் குணர்த்த வுள்ளேன் ;
‘செயிர்வினை யிஃதெ’ன் றெண்ணிச்
சிந்தைநோய் செய்தி டேலுன்
துயர்வினை துடைத்தற் குற்ற
துணைவன்நான் , தூய” னென்றேன்,
அகில்சூழ்ந்து கமழுங் கூந்தல்
அடிசூழ வைத்தா ளேனும்,
பகல்சூழ்ந்த மதியாய்ப் பாவம் !
பனிமுத்தாய் முகமும் வேர்த்துத்
துகில்சூழ்ந்த வுடலைத் தொட்டுத்
துடைத்தவ ளாகித் தொல்லை
நகல்சூழ்ந்த நிலைக்கு நாணி
நைந்திட லானுள் , நங்கை !
பாணத்தா லடிக்கப் பட்ட
பறவையின் பதின்ம டங்கு
நாணத்தால் நைக்கப் பட்ட
நங்கையைக் கூர்ந்து நோக்கிப்
பேணத்தான் வந்த பேரும்
பெண்மயி லகத்தைப் பிய்த்துக்
கோணத்தான் செய்த நானும்
குன்றினேன், குணங்கொள் ளாதே !