பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரங்கூன் வருகை

19

ஒரு ஜீப்பை வாடகைக்குப் பிடித்துக் கொண்டு நேரே எங்கள் வாடகை வீட்டுக்குப் புறப்பட்டேன்.

வீடுவந்தவுடன் கீழே இறங்கினேன், பெரியாரும் தோழர் ராஜாராமும் மணியம்மையாரும் இறங்கினார்கள். பெரியார் என் கையைப் பிடித்துக்கொண்டார். மெல்ல அழைத்துக்கொண்டு ஒடுங்கிய படிக்கட்டுப் பாதை வழியே மேலே ஏறினேன்.

மூன்றாவது மாடி வந்தவுடன், பூட்டியிருந்த கதவைத் திறந்தேன்.

கூட்டிமெழுகித் தூய்மையாக இருந்த அந்த வீட்டினுள் நுழைந்தவுடனே,

"எங்களுக்காகவே இந்த வீட்டை ஏற்பாடு செய்திருக்கிறீர்களா?" என்று மணியம்மையார் கேட்டார்கள்.

"இல்லை நாங்கள் குடியிருப்பதற்காக வாடகைக்குப் பிடித்த வீடு" என்றேன்.

"எங்களைத் தங்க வைப்பதற்காக உங்கள் மனைவியை வேறு வீட்டிற்கு அனுப்பிவிட்டீர்களா?"

"இல்லை என் மனைவியும் இதே கப்பலில் தான் வருகிறாள்.இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவாள்".

"என்ன பிள்ளை நீ மனைவியை விட்டுவிட்டு எங்களைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டாயே! போ போ! காரில் சென்று உடனே அழைத்துக்கொண்டு வா!" என்று பெரியார் சொல்லுமுன்னாலே என் மனைவி பெட்டி படுக்கை, முதலிய பதினைந்து மூட்டை முடிச்சுகளோடு வந்து இறங்கினாள்.