பக்கம்:பறவைகளைப் பார்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமது தாயும் தந்தையுமான பறவைகளுக்கு தெரிவிக்க முடியும். தமது இனத்தைச் சேர்ந்த பறவைகளின் பேச்சு ஒலிகளையும், பாட்டொலிகளையும் இளங்குஞ்சுகள் எப்படிக் கற்றுக்கொள்கின்றன தெரியுமா? பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு சில பறவைகள் இந்தத் திறமையைப் பாரம்பரியமாகப் பெறுகின்றன என்றும், சில பறவைகள் பெற்றோரைப் பார்த்துக் கற்றுக்கொள்கின்றன என்றும் கண்டுள்ளனர்.

அலகுகளைக் கொண்டே பறவைகள் பாடுகின்றன என்று மக்கள் கருதலாம். சில பறவைகளின் நாக்குகளைப் பிளந்துவிட்டால் நன்றாகப் பாடும் என்றும் பழங்கால மக்கள் நம்பினார்கள். ஆனால் காற்றுக்குழாய் சுவாசப்பைகளுக்குப் பிரியும் இடத்தில் உள்ள உட்பகுதியில்தான் பறவை ஒலி ஆரம்பமாகிறது. அங்கு உள்ள ஒரு மெல்லிய சவ்வு மூலம் ஒலி உண்டாகிறது. ஒளி பொருந்திய நிறமில்லாத சிறிய பறவைகள் தான் மிக நன்றாகப் பாடுகின்றன, அழகிய நிறமில்லாத குறைபாட்டை. அவை தமது அழகிய பாட்டால் நிறைவு செய்து கொள்கின்றன. மற்றப் பறவைகள் தங்கள் ஒளி நிறைந்த நிறங்களால் கவர்ச்சி செய்கின்றன. பறவைகளைக் கூர்ந்து நோக்கச் செல்பவர்கள் கண்களை விடக் காதுகளைத்தான் அதிகம் பயன்படுத்துவார்கள்; சிறிது தூரம் நடந்ததும் சற்று அப்படியே நின்று நன்றாக உற்றுக் கேட்பார்கள். மரங்களில் மறைந்துள்ள அப்பறவைகளின் ஒலிகளை இவ்வாறு கேட்டுப் பிறகு கண்டுகொள்வார்கள். வசந்த காலத்திலும் கோடைகால ஆரம்பத்திலும் தான் பறவைகளின் ஒலி மிக நன்றாக இருக்கும். இனிய பாட்டும் அப்பொழுது கேட்கிறது. பறவைகளின் கானத்தைக் கேட்பதற்கு அதிகாலையும் அந்திவேளையுமே சிறந்த நேரங்களாகும்.