பக்கம்:பறவைகளைப் பார்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈடுபட்டிருக்கவேண்டும். பறவைகளைத் தேடிச் சில சமயங்களில் வண்டிகளிலோ, சைக்கிளிலோ, விமானத்திலோ, தோணிகளிலோ செல்லவேண்டியிருக்தம். பாறைகளிலும், மரங்களிலும் ஏற வேண்டியும் நேரும். சினம்கொண்ட பலவகையான பறவைகள் கொத்த வருவதும் உண்டு. குளிரையும், வெப்பத்தையும், ஈரத்தையும் பொருட்படுத்தக்கூடாது. சில சமயங்களில் இரவு முழுதும் செலவழிக்க வேண்டும். ஆகவே பறவை ஆராய்ச்சி ஒரு நல்ல பொழுதுபோக்காக இருந்தாலும் விஞ்ஞான ரீதியில் பார்க்கும் போது சிரமமானதாகவும் இருக்கும்.

பறவைகளை இனம். புரிந்துகொள்வதற்கு இளவேனிற் காலமும் கோடைகாலத் தொடக்கமும் மிக ஏற்றவை. குளிர்காலத்தில் புதிதாக வந்து சேரும் பறவைகளோடு கலந்திருக்கும் குழப்பம் இருக்காது. பறவை உலகத்தில் ஜூலை மாதம் மிகுந்த சுவையானது. ஏனென்றால் அப்பொழுது இளம் பறவைகளும் காணப்படும்.

அதிகாலையிலும் கதிரவன் மறையும் வேளையிலுமே பெரும்பாலான பறவைகளின் நடமாட்டமும் பேச்சும் அதிகமாக இருப்பதால் அந்த வேளைகளே அவற்றைக் கவனிப்பதற்கு மிகப் பொருத்தமாக இருக்கும். பலமாகக் காற்று வீசும் நாட்களில் பறவைகள் வெளிவந்தால் காற்று அடித்துக்கொண்டு போய்விடும். ஆதலால் அந் நாட்களில் பறவைகளின் நடமாட்டம் மிகக் குறைவு. அதனால் அவைகளை ஆராய அந்நாட்கள் ஏற்றவையல்ல. பெருமழை பெய்தால் பறவைகள் எங்கேயாவது ஒளிந்து கொள்ளும். ஆனால் லேசாக மழை தூறும்போது அவற்றின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

மிகுந்த தொலைவிலிருந்துதான் நீர்ப் பறவைகளைக் கவனிக்கவேண்டும். எச்சரிக்கையோடு சென்றால் அருகில்கூடப் போய்விட முடியும்.

57