பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
52

ஜந்தாறு நாள் கழித்து முருகனிடம் தன் மகளுக்கு நல்ல கணவனாகவும், செல்வம் உள்ளவனாகவும் உள்ள ஒருவனையே தர வேண்டும் என்று வரம் கேட்பதற்காகக் கண்ணன் மலைக் கோயிலுக்குச் சென்றான்.

மலையடிவாரத்தை அடைந்த போது எதிரில் அந்த மயில் வந்தது. அத்துடன் பேசக் கூடாது என்று நினைக்கும்போதே "கண்ணா!" என்று அது கூப்பிட்டது. அன்பான அந்தக் குரலைக் கேட்ட போது அதன் மேல் இருந்த சினம் எல்லாம் மாயமாய் மறைந்து விட்டது.

அன்போடு அந்த மயில் "கண்ணா, பண்ணையாரைப் பார்த்தாயா?" என்று கேட்டது,

கண்ணனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை, கோபத்துடன் மயிலோடு பேசக் கூடாது என்று வந்தவன் அன்போடு கேட்கும் அந்த மயிலுக்கு என்ன பதில் சொல்லுவான். பண்ணையார் மகனை வேண்டாம் என்று சொல்வதா, மயில் சொல்லுகிறபடி போய்ப் பார்ப்பதா? அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. வாய் பேசாத ஊமையாக நின்று கொண்டிருந்தான்.

அவன் மனத்துக்குள் நினைப்பதை யெல்லாம் தெரிந்து கொண்டது போல் மயில் பேசியது.