பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

குத் திரும்பினேன்; அன்றை தினம் பம்பாய் ரெயில் சென்னைக்கு வருவதற்கு இரண்டு மணி நேரம் காலதாமதமாகியது.

நாங்கள் என் வீட்டிற்குப்போய் சேருவதற்காக வரதாமுத்தையப்பன் தெருவில் வந்து கொண்டிருக்கும்பொழுது, என் மோட்டார் வண்டிக்காரன் வண்டியை திடீரென்று நிறுத்தினான். என்னவென்று வெளியில் தலை நீட்டிப் பார்த்தபொழுது, எதிரில் ஒரு பெரிய ஜனக்கூட்டம் வந்து கொண்டிருந்தது. திரும்பி வேறு வழியாகப் போகலாமா இல்லையா என்று நான் தீர்மானிப்பதற்கு முன்பாக, அந்த ஜனக்கூட்டத்தின் மத்தியில் எங்கள் கார் அகப்பட்டுக் கொண்டது. சரி இக்கூட்டம் போன பிறகு தான் வீடு போய்ச் சேர வேண்டுமென்று என் புதிய நண்பருக்குத் தெரிவித்தேன். உடனே அக்கூட்டத்தின் மத்தியினின்றும் மதுரமான சங்கீதம் உண்டாயிற்று. அக் கூட்டம், ஒரு செட்டியார் வீட்டுப் பிள்ளையை பள்ளிக்கூடத்தில் வைப்பதற்காக ஊர்வலம் வரும் ஊர்கோலமாயிருந்தது; அவர் சென்னையில் மிகவும் பிரபல நாதஸ்வரக்காரனாகிய டி.துரைமுத்து என்பவனை ஏற்படுத்தியிருந்தார், அவன் அச்சமயம் பிலஹரி ராகத்தில் ஒரு பாட்டை மிகவும் அழகாக வாசித்துக் கொண்டிருந்தான்; அதைக் கேட்டவுடன் எனது புதிய நண்பர் முகமலர்ந்து, வெகு சந்தோஷத்துடன் அப்பாட்டைக் கேட்டு, “நாம் வீட்டிற்கு சீக்கிரம் போகாதபடி இக்கூட்டம் நம்மைத் தடுத்தற்காக நான் வருத்தப்படவில்லை, அகஸ்மாத்தாய் இப்படிப்பட்ட நல்ல கர்நாடக சங்கீதம் கேட்கும்படியாக எனக்கு பாக்கியம் தெய்வாதீனமாகக் கிடைத்ததே" என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்.

உடனே அந்த நாதஸ்வரக்காரன், அப்பாட்டை நிறுத்திவிட்டு வேறோரு பாட்டை ஆரம்பித்தான். அந்தப் பாட்டு, ஒரு சினிமா பாட்டு; அது சென்னையில் சினிமாவுக்குப் போகிறவர்களால் மிகவும் கொண்டாடப்பட்டு பட்டணம் முழுவதும் மிகவும் பிரசித்தமாயிருந்தது. அது 'சல் சல் ஜவான்' என்னும் முதல் பதங்களையுடைய ஒரு இந்துஸ்தானி பாட்டு. அந்தப் பாட்டை மதுரைமுத்து வாசிக்க ஆரம்பித்தவுடன், எனது நண்பர் முகம் கோணினார். அவன் அப்பாட்டை வாசிக்க வாசிக்க, அவரது முகம் கோணுதல் அதிகமடைந்தது; இதற்கு என்ன காரணம் என்று அவரை மெல்ல வினவ, அவர் அடியில் வருமாறு பதில் உரைத்தார். "இந்தப் பாட்டை நான் கேட்கப் பிரியப்படவில்லை; அதற்குப் பல காரணங்கள் உண்டு. இது சாதாரணமாக வடக்கே நாடகத்தில் பாடும்படியான மெட்டு உடையது. இப்படிப்பட்ட பாட்டுகளை வடக்கத்திய கவாய்கள் கச்சேரிகளில் பாடமாட்டார்கள். தங்கள் அந்தஸ்