{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
பல்கீஸ் நாச்சியார் காவியம் ஜின்கள் நாட்டு வேந்தனுக்குச் சிரம்பணிந் தெழுந்து பணிவுடனே பண்ணார் சொல்லில் இசைக்குரலில் பதமாய் முறையாய் சலாமுரைத்தான் அன்னோன் அழகை அவனுடைய அரிய சலாமும் நற்பணிவும் ன்னும் அதிகம் ஆக்கியதே இசைச்சொல் அரசை மயக்கியதே (193) அழகா லின்றிக் குணத்தாலும் அணிசெய் இனிய பண்பாலும் கழலடி பற்றி இவன்தனக்கே பழரசம் ஒத்த இசைக்குரலில் பகரும் வசியச் சொல்லாலும் கால மெல்லாம் தொண்டுசெய்யத் தழைக்கும் அன்பால் என்மகளை தருவேன் மணக்க சபைகாண (194) ஏடி யிதற்கு நீயென்ன இயம்பு கின்றாய் என்பதுபோல் நீடு விழியில் கேள்வியெழ நிமிர்ந்து பார்த்தான் அரசிதனை கோடும் இமைகள் மூடாமல் கொண்ட பார்வை மாறாமல் நாடும் அவள்தன் மருமகனாய் நன்கேற் றுள்ளாள் அவனையென (195) அறிந்து மகிழ்ந்து யூசருகின் அருகில் சென்று கரம்பற்றி செறிந்த அன்போ டுடனமர்ந்து சிறக்கப் பேசி உணவருந்தி உறையும் ஊர்பேர் கேட்டறிந்தான் உற்றார் பெற்றோர் மணவிவரம் முறையாய் உசாவித் தெரிந்துகொண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தனனே (196)