பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பரமேசுவரவர்மன்

139



இப் போரில் நெடுமாறனுக்குத் துணையாக அவன் மகனான கோச்சடையன் சென்றிருக்கலாம்; அல்லது அவனே தலைமை பூண்டு போரை நடத்தியிருக்கலாம்; ‘ரண ரசிகன்’ எனப்பட்ட விக்கிரமாதித்தனை வென்றமையால் தன்னை ‘ரண தீரன்’ என அழைத்துக் கொண்டிருக்கலாம். இங்ஙனமே விக்கிரமாதித்தனை வென்ற பரமேசுவரவர்மன் தன்னை ரணசயன் என்றும், (அவனுக்கு உதவியாகச் சென்ற) அவன் மகனான இராசசிம்மன் தன்னை ‘ரணசயன்’ என்றும் கூறிக்கொண்டனர் என்பது இங்கு அறியற்பாலது. இங்ஙனம் ஒரே காலத்தில் போரில் சம்பந்தப்பட்ட (பிற்காலச்) சத்யாசிரயனும் அவன் சிற்றரசனான குந்தமரசனும் தம்மைத் ‘திரிவுளமாரி’ (தமிழர்க்குக் கொள்ளைநோய் போன்றவர்) எனக் கூறிக்கொண்டனர் என்பது மேலைச் சாளுக்கியர் கல்வெட்டுகளால் அறியலாகும்.

இங்ஙனம் நெடுமாறனோடு போரிட்டுத்தோற்ற சாளுக்கியனைப் பின்னர்ப் பரமேசுவர்மன் பெருவள நல்லூரில் வன்மையுற எதிர்த்துத் தோல்வியுறச் செய்தானாதல் வேண்டும். ‘தமிழரசர் அனைவரும்கூடி விக்கிரமாத்தித்தனை எதிர்த்தனர்’ என்னும் கேந்தூர்ப்பட்டய மொழியும் இங்குக் கருதற்பாலது. இதுகாறும் கூறிய நெல்வேலிப் போரைப் பற்றிய செய்திகளை நடுவுநிலைவழாத வரலாற்று ஆசிரியம்மார் நன்கு ஆராய வேண்டுகிறோம்.

பல்லவர்-கங்கர் போர்

பரமேசுவரன் காலத்தில் கங்க அரசனாக இருந்தவன் பூவிக்கிரமன் (கி.பி.650-670); அவன்பின் முதலாம் சிவமாறன் (கி.பி.679-726) அரசன் ஆனான். இவருள் பூவிக்கிரமன் ‘விழிந்தம்’ முதலிய பல இடங்களில் பல போர்கள் பல்லவனோடு செய்ததாகக் கூறப் படுகிறது;[1] ஆயின், பல்லவர் பட்டயங்களில் இவை குறிக்கப் பெற்றில்.


  1. M.V.K.Rao’s “Gangas of Talakad,’ p.48.