பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/283

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
263
மூன்று ஐயங்கள்


வைத்துச் சமயக் கல்வியைப் புகட்டல், சமயப் போர் வீரரைத் தயாரித்தல், திருப்பணிகள் செய்ய மாணவரைத் தயாரித்தல். அடியார்கட்கு அன்னமளித்தல், அடியார் எப்பொழுது, வந்தாலும் உபசரித்து வேண்டின தருதல் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுப் பொதுமக்கள் உள்ளத்தைப் படிப்படியாகத் தம் பழைய சமயத்திற்கு ஈர்த்து வந்தனர். கோவில்களில் ஆடல் பாடல்கள் தோன்றின; நாடகங்கள் நடிக்கப் பெற்றன; பலவகைப் படைப்புப் பொருள்கள் (பிரசாதங்கள்) அடியார்க்குத்தரப்பெற்றன; இறைவர்மீது உள்ளத்தை உருக்கும் பதிகங்கள் இசைக்கருவிகள் துணையுடன் பாடப்பட்டன. ‘உலக வாழ்க்கை இன்பமானது; ஆண் - பெண் வாழ்வதே இன்ப வாழ்க்கை. இதுவே இறைவன் ஆணை: உலக இன்பங்களை நுகர்ந்து கொண்டே இறைவன்பால் பக்தி பூண்டு அவரவர் நிலைக்கேற்பத் திருப்பணிகளும் துயவாழ்வும் நடத்திப் போதலே போதும்’ என்று சைவரும் வைணவரும் கூறத் தொடங்கினர். மக்கள் மனம் தெளிவுற்றது; அச்சமற்றது. இந்த எளிய போதனையே பொதுமக்கள் விரும்புவதன்றோ? அதனால், சைவர் தொகை பெருகலாயிற்று: அதன் பயனாகச் சமணர் தொகை குறையலாயிற்று. சமணர் யாதுதான் செய்வர்? அரசன் அரவணைப்பும் ஒழியவே, சமண முனிவர் - பலர் பெருந்திய உள்ளம் உடையவராய்க் கங்கநாடு புக்கனர். அங்குத்தம் சமய இலக்கியப் பணிகளைச் செய்து புகழ் பெற்று வந்தனர்.[1]

சைவ சமயம்

வேதங்களிலும் ஆறு அங்கங்களிலும் பிறவற்றிலும் வல்ல மறையவர் நூற்றுக் கணக்காகப் பல்லவர் நாட்டிற் குடியேற்றம் பெற்றனர். இங்ஙனம் மறையவர் தொகை பெருகப் பெருக, அவரது வைதிக சமயம் பழந்தமிழ்ச்சைவசமயத்தோடு இரண்டறக் கலந்தது; அவர் தம் உருத்திர வணக்கம் நன்றாகச் சிவ வணக்கத்திற் கலந்துவிட்டது. சங்ககால இறுதியிலேயே உண்டான சிவஉருத்திரக் கலப்பைத் திருவாசகத்திற் காணலாம். பின்வந்த மறையவரால் மிகுந்த சமயக் கலப்பு ஏற்பட்டது. என்பதைக் கி.பி.


  1. M.V.K. Rao’s “Gangas of Talakad”.