பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/285

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று ஐயங்கள்

265முடியைக் கத்தரித்து விடுவர்; சிலர் மொட்டையடித்துவிடுவர்; சிலர் குடுமி வைத்திருப்பர். சிலர் உடல் முழுதும் நீறுபூசி ஆடையின்றி நடமாடினர். ஆயின், இவர் அனைவரும் உலகப்பற்றை விட்டு மேனிலை பெறத் தவ முயற்சி மேற்கொண்டிருந்தனர். இவருட்சிலர் சிறுகணங்கள் எனப்பட்டவற்றினிடம் நம்பிக்கை வைத்தனர். அவற்றை உளங்குளிரச் செய்ய மக்களைப் பலியிடல், இறந்தவர் இறைச்சியைப் படைத்தல் முதலியவற்றில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.[1]

காபாலிகர்

இவர் பைரவரை வணங்கினவர், மண்டை ஒடுகளை மாலைகளாக்கி அணிந்து கொண்டிருந்தனர். மனிதர் உட்பட எல்லா உயிர்களையும் பைரவர்க்குப் பலியிட்டனர்; பலியிட்ட உடல் இறைச்சியையும் மதுவையும் உட்கொண்டனர்; பெண்களை ‘ஆதி சக்தி அவதாரம்’ என்று வணங்கினர்; சிவ வழிபாட்டில் எல்லாச் சமயத்தவரும் சமமானவரே என்ற கொள்கை கொண்டவர். இவர்கள் முயற்சியால் சக்தி வணக்கம் மிகுதிப்பட்டது.[2] இவருள் பெண்பாலரும் இருந்தனர் என்பது மத்தவிலாசத்தாற் புலனாகிறது.

காளாமுகர்

இவர் ‘லகுலீச பாசுபதர்’ என்னும் பெயர் பெற்றவர் பக்தி முறை பின்பற்றியவர்: இறைவனைப் பற்றிப் பாடலும் மெய்மறந்து ஆடலும் மந்திரம் செபித்தலும் செய்தனர். இவர் அனைவரும் சிறந்த கல்வி கற்றவர். இவர்கள் செல்வாக்கு, தமிழகத்தில் மிகுந்திருந்தது. சோழர் காலத்தில் பல கோவில்கள் இவர்கள் மேற்பார்வையில் விடப்பட்டிருந்தனர்.


  1. M.V.K. Rao’s Gangas of talakad p.189. ‘உயிர்ப்பலி பற்றிய செய்தி இப்பகுதியின் பிற்பட்ட பிரிவிலே விளக்கப்பட்டடுள்ளது.
  2. Ibid. pp.188-189