பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/309

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
289
மூன்று ஐயங்கள்


கூரையில் உள்ள ஒவியம்

முன் மண்டபக் கூரை முழுவதும் அணி செய்து கொண்டு இருக்கும் ஓவிய அழகே சித்தன்னவாசல் சிறப்பைப் பெரிதும் காட்டுவதாகும். அவ்வோவியம் தாமரை இலைகளும் தாமரை மலர்களும் கொண்ட தாமரைக் குளமாகும். இவற்றுக்கு இடையில் மீன்கள், அன்னங்கள், யானைகள், எருமைகள் இவற்றின் படங்கள் காணப்படுகின்றன. இவற்றுடன் கையில் தாமரை மலர்களைத் தாங்கியுள்ள சமணர் இருவரும், இடக்கையில் பூக்கூடை கொண்டு வலக் கையால் மலர் பறிக்கும் சமணர் ஒருவரும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

இஃது எதனைக் குறிக்கிறது?

இவ் வேலைப்பாடு சமணர் சமயக்குறிப்பை உடையதாகும். இது சமணர் துறக்கத்தை உணர்த்துகிறது என்று சிலரும், ‘சூத்ரக்ருதாங்க்ம்’ என்னும் சமண நூலின் இரண்டாம் பிரிவிற்குமுன் உள்ள தாமரை பற்றிய உரையாடலைக் குறிப்பதாக இருக்கலாம் என்று சிலரும் - இங்ஙனம் பலர் பலவாறு கூறியுள்ளனர். இந்த ஓவியத்தில் உள்ள குளத்து நீர் அழகிய கோலத்துடன் விளங்குகின்றது. மலர் ஒவியங்கள் இயற்கை மலர்களையே பெரிதும் ஒத்துள்ளன. ஏனையவை உயிர் ஓவியங்கள் என்னலாம்.

உள்ளறை மேற்கூரை

உள்ளறையின் மேற்கூரையிலும் இங்ஙனமே நிறம் தீட்டப் பட்டுள்ளது. அது ஸ்வஸ்திகா, சூலம், சதுரம், தாமரைமலர் முதலியவற்றைக் கொண்டு போடப்பட்டகோலம் ஆகும். சுவஸ்திகா சமணர் கையாண்ட குறியாகும். ஏழாம் தீர்த்தங்கரரான சுபார்சவநாதர் தமது அடையாளமாக சுவஸ்திகாவைக் கொண்டிருந்தார். தீர்த்தங்கரது ஊர்வலத்திற் செல்லத்தக்கஎட்டுக்குறிகளில் ‘சுவஸ்திகா’ ஒன்றாகும். திரிசூலம் சிவனுக்குரியது. ஆயின், புத்தர்க்கும் உரியதே ஆகும். சமணர் குறிகளில் திரிசூலமும் காணப்படுகிறது.