பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/311

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
291
மூன்று ஐயங்கள்


காளியும் போரிடலைக் குறிக்கும் சிற்பமும் போதியவையாகும். மேலும் காணவேண்டுமாயின், கயிலாசநாதர் கோவில், வைகுந்தப் பெருமாள் கோவில்களிற் கண்ணாரக் கண்டு களிக்கலாம். சென்ற பகுதியில் கூறப்பட்ட சிவனார் நடன வகைகளை உணர்த்தும் சிற்பங்கள் மிகச் சிறந்தனவாகும்.


23. பல்லவர் காலத்துக் கோவில்கள்

கோவிலும் கல்வெட்டும்

“செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் இவை இல்லாமல் மும்மூர்த்திகட்கு விசித்திரசித்தன் (மகேந்திரவர்மன்) அமைத்த கோவில் இது” என்னும் கல்வெட்டு மண்டபப்பட்டில் காணப்படுகிறது. இதன் காலம் கி.பி. 615-630 ஆகும்.

இந்த மண்டபப்பட்டுக் கல்வெட்டால் அறியத்தக்க செய்திகளாவன:-

(1) மகேந்திரன் காலத்திற்கு முன்னர்க் கற்கோவில்கள் இல்லை. இருந்த கோவில்கள் செங்கல். சுண்ணாம்பு, மரம், உலோகம் இவற்றால் ஆனவை.

(2) மகேந்திரனுக்கு முன்னரே தமிழ் மக்கள் கோவில் கட்டத் தெரிந்திருந்தனர். ஆனால், அக் கோவில்கள் நாளடைவில் அழிந்துவிடத்தக்கவை.[1]

(3) அழியத்தக்க பொருள்களால் அமைந்த கோவில்களையே மகேந்திரன் கற்களில் செதுக்கி அமைத்தான்.[2]


  1. இத்தகைய கோவில் திருவெண்காட்டுப் பெருங்கோவிலில் இன்றும் இருக்கிறது, அதன் வேலைப்பாடு பார்த்து வியக்கத்தக்கது.
  2. Loughurst “The Pallava Arehitecture” Part I, pp.22-23.