பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
29
பல்லவர் யாவர்?


தொண்டை நாடும் சங்க நூல்களும்

வடபெண்ணை யாற்றைத் தென் எல்லையாகவும் சோணையாற்றை வட எல்லையாகவும் அரபிக்கடலை மேற்கு எல்லையாகவும் கலிங்கத்தையும் வங்க மாகாணத்தையும் கிழக்கு எல்லையாகவும் கொண்ட ஆந்திரப் பெருநாடு கி.மு. 184 முதல் கி.பி. 260 வரை செறிப்புற்று இருந்தது. வடபெண்ணை முதல் தென்பெண்ணைவரை இருந்தநிலப்பரப்பே அக்காலத்தொண்டை மண்டலம் எனப்பட்டது. அஃது அருவாநாடு, அருவா வடதலை நாடு என இரண்டு பிரிவுகளாக இருந்தது- முன்னதில் காஞ்சி நகரம் உட்பட்டது. பின்னது காஞ்சி முதல் வடபெண்ணை வரை இருந்த நாடாகும். இது குன்றுகளும் காடுகளும் சூழ்ந்த இடமாகும்; காளத்தி முதலிய மலையூர்களைத் தன்னகத்தே பெற்றது. அவ்விடம் இன்றும் ‘தொண்டைமான் மாகணி’ (மாகாணம்) எனப்படும். இரண்டு வெள்ளாறுகட்கு இடையில் உள்ள நிலமே சோழநாடு. தென்வெள்ளாற்றுக்குத் தென்பால் உள்ள இடமே பாண்டியநாடு. கொச்சி, திருவாங்கூர் நாடுகள் அடங்கிய இடமே பழைய சேர நாடாகும். குடகு முதலிய மலை நாட்டு இடங்களும் அவற்றைச் சார்ந்த கடற்கரையும் கொங்காணம் எனப்படும். அதனைச் சங்க காலத்தில் நன்னன் என்பவன் ஆண்டு வந்தான்.

வடக்கே இருந்த அருவா வடதலை நாட்டில் திருப்பதியைத் தன் அகத்தே கொண்ட மலைநாட்டுப் பகுதியைத் திரையன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் தலைநகரம் பாவித்திரி என்பது. அஃது இப்பொழுதையை கூடுர் தாலுக்காவில் உள்ள ரெட்டிபாளையம், என்னும் ஊராகும். இந்நிலப்பகுதி முன்னாளில் காகந்தி நாடு எனப்பெயர் பெற்றது. காகந்தி என்பது புகாரின் மறுபெயர் ஆகும். சோழர் இப் பகுதியைக் கைக்கொண்டமையின், இதற்குக் காகந்தி நாடு (புகாருக்கு உரிமையான நாடு) என்று பெயரிட்டனர் போலும் ‘கரிகாற் சோழன்’ காடு கெடுத்து நாடாக்கினான். விளை நிலங்கள் ஆக்கினான். ஏரி குளங்களை வெட்டுவித்தான்: தொண்டை மண்டலத்தை நாடாக்கினான்: நாகரிகத்தைத் தோற்றுவித்தான்.'