பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழங்கதைகளும் பழமொழிகளும்


இச்சிற்பங்கள் பருவமாற்றத்தின் போதுபண்டைய எகிப்தியமக்கள் நிகழ்த்திய சடங்குகளுக்கு அடிப்படையான நம்பிக்கைகளை மிகத் தெளிவாகக் காட்டுகின்றன. இச்சடங்குகளிலிருந்தும், நம்பிக்கைகளிலிருந்தும்தான் ஆஸிரிஸ், ஐஸிஸ் புனைகதை உருவாகியது. எனவே இயற்கையின் மாற்றத்தை விளக்க முடியாத போது மாந்திரீகச் சடங்குகளைக் கையாண்டு, அதனை தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்கேற்ப மாற்றுகிறபோது தோன்றுகிற நம்பிக்கைகளை உறுதிப்படுத்திக்கொள்ளவும், அடுத்த பரம்பரைக்கு அவற்றை வழிச் செலுத்தவும் இப்புனைகதைகள் தோன்றின. இக்கதைகள் குறிப்பிட்ட சமுதாய நிலைமைகளில் குறிப்பிட்ட பண்பாட்டுச் சூழலில் எழுந்தன. இவை சமூக மாறுபாட்டுக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும் ஏற்றாற்போல் மாறின. வெவ்வேறு சமூக அமைப்புகளும் பண்பாட்டு வளர்ச்சியும் உடையவர்கள் கலப்புறும் பொழுது இணைந்தும், அவை முரண்பட்டும் வேறுபட்டும், வளர்ச்சியும், சிதைவும் அடைந்தன. எகிப்தில் நடைபெற்ற இச்சடங்கு மிகப் பழமையானது. எகிப்தின் பாராவோக்கள், புரோகிதர்களாகவும், ஆடுபவர்களாகவும் செயல் புரிந்தனர். மன்னர்களான பின், அவர்கள் ஆஸிரிஸ் சடங்குகளின் கதாநாயகர்களாகினர். பாராவோசாவதாகவும், உயிர்த்தெழுவதாகவும் இச்சடங்கு நடைபெற்றது. அதன் பின்னர் மன்னனது தெய்வீகத் தன்மையை நிலைநாட்டுவதற்காகவே கதைகள் புனையப்பட்டு, இச்சடங்கிற்குப் பொருளை அளித்தனர். ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவினை விளக்க எழுந்த கதை சமூகப் பொருளாதார அமைப்பை நிலை நிறுத்தப் பயன்படுத்தப்பட்டது. ஆடுமாடுகள் பல்கிப் பெருகவும், பயிர்கள் செழித்து வளரவும், மனித இனம் பெருகவும் இச்சடங்கு அவசியமென எண்ணிய புராதன எகிப்தியர்கள், தங்கள் பண்பாட்டுக் கதாநாயகனைச் சிந்தனையில் தோற்றுவித்து, ஆண்டுதோறும் அவனது சாவையும் உயிர்த்தெழுதலையும் கொண்டாட அவனைச் சுற்றி ஒரு புனை கதையையும் படைத்தார்கள்; இது தனி மனிதச் சடங்கல்ல; சமுதாயச் சடங்கு. இது சமூக நலனை நோக்கமாகக் கொண்டது. தனி மனித மோட்சத்தை நோக்கமாகக் கொண்டதல்ல. அரசனுடைய தெய்வத்தன்மை, விவசாயப் பருவங்களின் மாறுதலைக் குறிக்கும். “ஹோரஸ் ஆஸிரிஸ்