பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

菲 முதல் பதிப்புக்கான பதிப்புரை பேராசிரியர் நா. வானமாமலை கடந்த சில ஆண்டுகளில் எழுதியவற்றுள் மணியான ஆறு ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து, சிறு நூலாகத் தமிழ் வாசகர்களுக்கும் தமிழ் ஆராய்ச்சியில் ஆர்வமுடையோருக்கும் வழங்குகிறோம். தொன்னெடுங் காலமாகத் தமிழ் நாட்டில் வழக்கில் இருந்துவரும் பழங் கதைகளிலும் பழமொழிகளிலும் சில வகைகளை இக்கட்டுரைகள் ஆராய்கின்றன. இந்த ஆய்வின் மூலம் கட்டுரை ஆசிரியர் அக்காலத் தமிழக வரலாறு, சமூக நிலைமைகள் பற்றிய பல சுவையான உண்மைகளை நமக்குப் புலப்படுத்துகிறார். மார்க்சிய முறையியலைக் கையாண்டு பிரச்சினைகளைப் பரிசீலனை செய்யும்ஆசிரியர்,ஆழ்ந்த சிந்தனைக்குரிய முடிவுகளை வந்தடைகிறார். - ஆறு கட்டுரைகளும் சிந்தனையொருமையால் ஒருசேர பிணைக்கப்பட்டு முழுமையான தனியொரு நூலாக விளங்குவது குறிப்பிடத்தக்கதாகும். இந்நூலின் அச்சுப்படிகள் தயாரான நேரத்தில் இதன் ஆசிரியர் மறைந்த செய்தி எல்லோரையும் திடுக்கிடச் செய்தது. மார்க்சிய அறிஞர்; போதனாசிரியர்; முதுபெரும் ஆராய்ச்சி வல்லுநர் மிகப்பல துறைகளிலும் முன்னோடியாகத் திகழ்ந்து புதுமைகள் பல கண்டவர்; முற்போக்கு இலக்கியவாதி, இளம் எழுத்தாளர்களுக்கும் விமர்சகர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் வழிகாட்டி வந்த ஆசான்; பாட்டாளி மக்களது தோழனாய் வாழ்வெல்லாம் அயராது உழைத்த உத்தமர் - இப்படிப் பல சிறப்புகளுக்கும் உரியவராகத் திகழ்ந்தவர் பேராசிரியர் நா. வானமாமலை. அவரது மறைவு தமிழகத்துக்கு நேர்ந்திருக்கும் பேரிழப்பாகும்.