பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


8. இலங்கைத் துறைமுகங்கள்

மணிபல்லவம் (ஜம்புகொல பட்டினம்)

ணிபல்லவம் என்றும் ஜம்புகொல பட்டினம் என்றும் பெயர் பெற்ற மிகப் பழைய துறைமுகப் பட்டினம் இலங்கையின் வடகோடியில் இருந்தது. இது இப்போதைய யாழ்ப்பாணத்துக்கு வடக்கே இருந்த ஒரு சிறு தீவு. மணிமேகலைக் காவியம் இதை மணிபல்லவம் என்றும் இலங்கைப் பாலி மொழி நூல்கள் ஜம்புகொல பட்டினம் என்றும் கூறுகின்றன. சம்பில் துறை என்றும் இது கூறப்பட்டது. அக்காலத்தில் பேர்போன துறைமுகப் பட்டினமாக விளங்கிய இங்கு வாணிகப் பொருள்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் இடமாக இல்லை. கப்பல் போக்குவரத்துக்குரிய துறையாகவும் , தமிழ் நாட்டிலிருந்து கிழக்கே நெடுந்தூரம் போகிற கப்பல்கள் வந்து தங்கி குடிநீர் எடுத்துக் கொள்ளும் இடமாகவும் இருந்தது. இத்துறைமுகத்திலிருந்து தெற்கே இலங்கையின் அக்காலத்துத் தலை நகரமான அநுராதபுரத்துக்கு (அநுரைக்கு) நெடுஞ்சாலையிருந்தது.

இலங்கையை யரசாண்ட தேவனாம்பிரிய திஸ்ஸன் (கி.மு. 247-97) என்பவர் இந்தியாவை அக்காலத்தில் அரசாண்ட அசோக சக்ரவர்த்தியிடம் தூதுக் குழுவை அனுப்பின போது அத்தூதுக்குழு மணிபல்லவத் துறைமுகத்திலிருந்து கப்பலேறிப் புறப்பட்டது. புறப்பட்டு ஏழு நாள் வடக்கே கடற்பிரயாணஞ் செய்து தாமலித்தி துறைமுகத்தையடைந்து அங்கிருந்து கங்கையாற்றில் புகுந்து பாடலிபுரத்துக்குச் சென்று அசோக சக்கரவர்த்தியைக்

98