பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிகம் மிகச் சிறப்பாக நடந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைகளையடுத்த சேர நாட்டிலும் துளு நாட்டிலுமே மிளகு உண்டானபடியால் இந்த இடங்களிலிருக்தே மிளகு மற்ற எல்லா நாடுகளுக்கும் சென்றது. பாண்டிநாடு , சோழநாடு, கொங்கு நாடு, தொண்டை நாடு முதலான தமிழகத்து நாடுகளுக்கும் தமிழகத்துக்கு அப்பால் வடக்கேயுள்ள பாரத தேசத்து நாடுகளுக்கும், பாரசீகம் எகிப்து உரோமாபுரி கிரேக்கம் முதலான தேசங்களுக்கும் சேர நாட்டு மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டது. தமிழகத்தின் மேற்குக் கரையோரங்களில் விளைந்த மிளகு கிழக்குக் கரையோரத்திலிருந்த காவிரிப்பூம் பட்டினத்துக்கும் வண்டிகளிலும் பொதிமாடு பொதி கழுதைகளிலும் கொண்டுவரப்பட்டது. 'காலின் வந்த கருங்கறி மூடை' என்று இதனை கடியலூர் உருத்திரங் கண்ணனார் கூறுகிறார் (பட்டினப்பாலை, அடி. 186) (கால் - வண்டி., பொதிமாடு முதலியன. கறி மூடை = மிளகு மூட்டை ) (வணிகச் சாத்து - வணிகக் கூட்டம்). மிளகு பொதிகளைக் கழுதைகளின் முதுகின் மேல் ஏற்றிக்கொண்டு நெடுஞ்சாலை வழியே சென்றதையும் மிளகு மூட்டைகள் பலாக்காய் அளவாக இருந்ததையும் வழியில் இருந்த சுங்கச் சாவடிகளில் அரச ஊழியர் சுங்கம் வாங்கினதையும் அந்தப் புலவரே கூறுகிறார்.

'தடவு நிலைப் பலவின் முழுமுதல் கொண்ட
சிறுசுளைப் பெரும்பழம் கடுப்ப மிரியல்
புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்து
அணர்ச்செவி கழுதைச் சாத்தோடு வழங்கும்
உல்குடைப் பெருவழி.'

(பெரும்பாண், 77-89)

(பலவின் முழுமுதல்-பலா மரத்தின் அடிப்புறம் ; பலா மரத்தின் அடிப்பக்கத்தில் பலாப் பழங்கள் காய்ப்பது இயல்பு; கடுப்ப-போல; மிரியல்-மிளகு, கறி; நோன் புறம்-வலிமையுள்ள முதுகு ; சாத்து-வணிகக் கூட்டம்; உல்கு-சுங்கம், சுங்கச் சாவடி.)

112