பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்று தாயங் கண்ணனார் கூறுகிறார். சேரர்களுடைய முசிறிப்பட்டினத்துக்கு யவன வாணிகர் வந்ததையும் அவர்களுடைய 'வினைமாண் நன்கலம்' அழகாக இருந்ததையும் அவர்கள் பொற் காசுகளைக் கொடுத்து மிளகை வாங்கிக் கொண்டு போனதையும் இவர் கூறுவது காண்க.

சேரநாட்டில் விளைந்த மிளகை வீடுகளில் மூட்டைக் கட்டி வைத்தார்கள். யவனக் கப்பங்கள் வந்தபோது மிளகு மூட்டைகளைப் படகுகளில் ஏற்றிக்கொண்டு கழிகளின் வழியே ஆற்றில் சென்று துறைமுகத்தில் தங்கியிருந்த யவனக் கப்பல்களில் ஏற்றுமதி செய்து அதற்கான பொற்காசுகளைப் பெற்றுக் கொண்டு வந்தனர் என்று பரணர் கூறுகிறார்.

'மனைக்குவைஇய கறிமூடையால்
கலிச்சும்மைய கரைகலக் குறுந்து
கலந்தந்த பொற்பரிசம்
கழித்தோணியால் கரைசேர்க்குறுத்து'

(புறம், 343)

(மனைக்குவைய-வீடுகளில் குவித்து வைத்த; கறிமூடை-மிளகு மூட்டை. கலம்-(யவனரின்) மரக்கலம்; பொற் பரிசம்-பொற்காசு)

யவனக் கப்பல்கள் சேரநாட்டுக்கு வந்து வாணிகம் செய்தபடியால் சேர மன்னருக்குப் பொருள் வருவாய் அதிகமாயிற்று. இதனைக் கண்ட துளுநாட்டு அரசனான நன்னன் இந்த வாணிகத்தைத் தன் நாட்டில் வைத்துக் கொள்ள எண்ணினான். நன்னனுடைய துளு நாட்டில் அக்காலத்தில் முக்கியமான துறைமுகப் பட்டினமாக இருந்தது மங்கலபுரம் என்னும் மங்களூர். இந்தத் துறைமுகம் நேந்திராவதி ஆறு கடலில் கலக்கிற இடத்தில் இருந்தது. பிளினி என்னும் யவனர் அந்தத் துறைமுகத்தை நைத்ரியாஸ் (Nitrias) என்று கூறியுள்ளார். இவர் கூறுகிற நைத்ரியாஸ் என்பது நேத்திராவதி. நேத்திராவதி ஆறு கடலில் கலக்கிற இடத்தில் மங்களூர் இருந்தபடியால் இத்துறைமுகப் பட்டினத்தை அவர் நைத்ரியாஸ் என்று கூறினார் என்று தோன்றுகின்றது. சேரநாட்டுக்கு வருகிற கப்பல்கள் துளு நாட்டு மங்களூர் துறைமுகத்தைக் கடந்து தான் வரவேண்டும். ஆனால்

114