பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உமணர் (உப்பு வாணிகர்) மாட்டு வண்டிகளில் நெல்லை ஏற்றிக் கொண்டு போனார்கள். அக்காலத்தில் பெரிதும் பண்டமாற்று வாணிகம் நடந்தது. ஆகையால் காசு கொடுத்து வாங்காமல் பண்டங்களை மாற்றினார்கள். நெல்லுக்கு மாற்றிய உப்பை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு போனார்கள். அவர்கள் மனைவி மக்களொடு வந்து உப்பை வாங்கிக் கொண்டு குடும்பத்தோடு ஊர் ஊராக வண்டியை ஓட்டிக் கொண்டுபோய் உப்பை விற்றார்கள்,

'தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து
பிறநாட்டு உப்பின் கொள்ளை சாற்றி
நெடுநெறி ஒழுகை நிலவுமணல் நீந்தி
அவண் உறை முனிந்த ஒக்கலோடு புலம்பெயர்ந்து
உமணர் போகலும்.'

(அகம், 183: 1-5)

(தந்தாடு -உமணருடைய நாடு; பிறநாடு-(இங்கு) நெய்தல் நிலம் ; கொள்ளை சாற்றி-விலை கூறி; ஒழுகை வண்டி; அவண் - அங்கே ; ஒக்கல்-சுற்றம்).

உமணர் உப்பு வண்டிகளை ஓட்டிக்கொண்டு கூட்டங் கூட்டமாகச் சென்றார்கள் .

'உவர்விளை உப்பின் கொள்ளை சாற்றி
அதர்படு பூழிய சேண்புலம் படரும்
ததர்கோல் உமணர் போகும் நெடுநெறிக்
கணநிரை வாழ்க்கை '

(அகம், 390: 1-4)

கடற்கரைக்கு அப்பாலுள்ள உள் நாடுகளுக்கும் மலை நாடுகளுக்கும் எருதுகள் உப்பு வண்டியை இழுத்துக்கொண்டு போயின.

'கழியுப்பு முகத்து கன்னாடு மடுக்கும்
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரனுடை நோன்தாள் பாகடு'

(புறம், 60; 8-9)

(கழி-உப்பங்கழி; கல்நாடு-மலைநாடு; சாகாடு-வண்டி; ஆழ்ச்சி போக்கும் பள்ளத்திலிருந்து மேட்டின்மேல் செல்லும் பகடு - எருது).

121