பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேளாப்பார்ப்பான் என்பதன் பொருள் வேள்வி செய்யாத பார்ப்பான் என்பது. அதாவது விகவப் பிராமணர். சங்குகளை வளையாக அறுக்கும் தொழிலும் சங்கு வளைகளை விற்கும் தொழிலும் அக்காலத்தில் சிறப்பாக நடந்தன. முக்கியமான நகரங்களில் சங்கறுக்கும் தொழில் நடந்தது. காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு வீதியில் சங்குகளை வளையல்களாக அறுக்கும். தொழில் நடந்தது. 'அணிவளை போழுநர் அகன்பெரு வதியும்' (சிலம்பு, 5-47) சோழ நாட்டு வஞ்சிமா நகரத்தில்,

'இலங்கரம் பொரூஉம் வெள்வளை போழ்தரோடு
இலங்குமணி வினைஞர் இரீஇய மறுகும்'

(மணிமே, 28: 44-45)

இருந்தன.

சங்கு வளைகளை அணிவதை அக்காலத்து மகளிர் நாகரிகமாகக் கருதினார்கள். அன்றியும், அது மங்கலமாகவும் கருதப்பட்டது. கைம் பெண்கள் தவிர ஏனைச் சுமங்கலிப் பெண்கள் எல்லோரும் சங்கு வளைகளை அணிந்தார்கள் - ' அணிவளை முன்கை ஆயிழை மடந்தை ' (அகம், 361:4) 'சின்னிரை வால்வளைக் குறுமகள்' (குறும், 189:6) 'வளைக் கை விறலி' (புறம், 135:4,) 'வல்லோன் வாளரம் பொருத கோணேர் எல்வளை அசன்தொடி செறித்த முன்கை' (நற், 77: 8-10) என்றெல்லாம் சங்க நூல்களில் அக்காலத்து மகளிர் வளையணிந்திருந்தது கூறப்படுகின்றன. சொக்கப் பெருமான் வளையல் விற்றதாகத் திருவிளையாடற் புராணத்தில் (வளையல் விற்ற படலம்) கூறப்படுகின்றது. இடம்புரிச் சங்கினால் செய்த வளையல்களைச் சாதாரண நிலையில் உள்ள பெண்கள் அணிந்தார்கள், வலம்புரிச் சங்குகள் விலையதிக மானபடியால் செல்வச் மொட்டிகளும் இராணிகளும் அணிந்தார்கள். செல்வ மகளிர் போற்றோடு (பொன் வளையல்) அணிந்து அதனுடன் வலம்புரிச் சங்கு வளையலையும் அணிந் தார்கள். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுடைய அரசியாகிய பாண்டிமாதேவி கை களில் தங்க வளைகளை அணிந்திருந்ததோடு வலம்புரிச் சங்கு வளையையும் அணிந்திருந்தார்.

126