பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(தேன்நெய்-தேன்; மாறியோர் மாற்றினவர்கள் ; மீன் நெய்வறுத்த மீன்; நறவு-மது, கள்; மான்குறை-மான் இறைச்சி)

கொற்கைக் குடாக்கடலின் கரையோரங்களில் வாழ்ந்த பரதவர், கொற்கைக் கடலில் மீன் பிடித்த போது அதனுடன் முத்துச் சிப்பிகளும் கிடைத்தன. அந்தச் சிப்பிகளை அவர்கள் கள்ளுக்கடையில் மாற்றிக் கள் குடித்ததைப் பேராலவாயர் கூறுகிறார்.

‘பன்மீன் கொள்பவர் முகத்த சிப்பி
நாராரி நறவின் மகிழ்நொடைக் கூட்டும்
பேரிசைக் கொற்கை '

(அகம், 296:8-10)

(இப்பி-முத்துச் சிப்பி)

குறிப்பு: பாண்டி நாட்டிலிருந்த பேர் போன கொற்கைக் குடாக்கடல் பிற்காலத்தில் மணல் தூர்ந்து மறைந்து போய் விட்டது.)

எயினர் மது அருந்துவதற்காக மது விற்கும் இடத்துக்கு வந்து எந்தப் பொருளும் இல்லாதபடியால், 'காட்டில் வேட்டையாடி யானைத் தந்தங்களைக் கொண்டு வந்து கொடுப்போம். அதற்கு ஈடாக இப்போது கள்ளைக் கடனாகக் கொடு' என்று கேட்டதை மருதன் இளநாகனார் கூறுகிறார்.

'அரிகிளர் பணைத்தோள் வயிறணி திதலை
அரிய லாட்டியர் அல்குமனை வரைப்பின்
மகிழ்நொடை பெறாஅர் ஆகி நனைகவுள்
கான யானை வெண்கோடு சுட்டி
மன்றாடு புதல்வன் புன்றலை நீவும்
அருமுனைப் பாக்கம்'

(அகம், 245:8-13)

கொல்லி மலைமேல் வாழ்ந்த சிறுகுடி மக்கள், தம் சுற்றம் பசித்திருப்பதனால், தங்களிடமிருந்த யானைத் தந்தங்களைத் தானியத்துக்கு மாற்றிச் சோறு சமைத்து உண்டனர் என்று கபிலர் கூறுகிறார்.

'காந்தளஞ் சிலம்பில் சிறுகுடி பசித்தெனக் கடுங்கண் வேழத்துக் கோடு கொடுத் துண்ணும் வல்வில் ஓரி கொல்லிக் குடவரை'

(குறுந்தொகை 100: 3-5)

18