பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனால், அக்காலத்தில் சேர நாட்டையரசாண்ட இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அந்தக் கடற் குறும்பரை வென்று அடக்கினான், கடற் குறும்பர் அழிந்த பிறகு யவனக் கப்பல்கள் சேர நாட்டுத் துறைமுகங்களுக்கு வந்து போயின.

கடல் துருத்தியில் இருந்த கடற்குறும்பர் அத்தீவில் கடம்ப மரம் ஒன்றை வளர்த்து வந்தனர். அவர்கள் அத்தீவிலிருந்து கொண்டு அவ்வழியாக வாணிகத்தின் பொருட்டு வந்த யவனக் கப்பல்களை முசிறித் துறைமுகத்துக்கு வராதபடி தடுத்தனர். ஆகவே, அவர்களை அழிக்க இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தன்னுடைய மக்கள் நால்வரில் ஒருவனான சேரன் செங்குட்டுவனைக் கப்பல் படையின் தலைவனாக அமைத்து அனுப்பினான். செங்குட்டுவன் கடலில் சென்று கடற்றுருத்திக் குறும்பரை வென்று அவர்கள் வளர்த்த கடம்பு மரத்தை வெட்டி அதன் அடி. மரத்தினால் முரசு செய்தான். இவ்வாறு கடற்குறும்பர் அழிக்கப்பட்ட பிறகு யவனக் கப்பல்கள் சேர நாட்டுத் துறைமுகப் பட்டினங்களுக்கு வந்தன. நெடுஞ்சேரலாதன் கடம்பரை அழித்த செய்தியைப் பதிற்றுப் பத்து, இரண்டாம் பத்து , ஐந்தாம் பத்துகளினால் அறிகிறோம்.

'பவர் மொசிந்து ஒம்பிய திரள்பூங் கடம்பின்
கடியுடை முழுமுதல் துரிய ஏஎய்
வென்றெறி முழங்குபனை செய்தவெல் போர்
தாரரி நறவின் ஆரமார்பின்
போரடு தானைச் சேரலாத.'

(2 ஆம் பத்து 1: 12-16)

இதில் இவன் கடம்பரை நேரில் சென்று அடக்காமல் தன் மகனை ஏவினான் என்பது கூறப்படுகிறது. ஏவப்பட்டவன் இவனுடைய மகனான செங்குட்டுவன்,

'இருமுந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச் சென்று
கடம்பு முதல் தடித்த கடுஞ்சின முன்பின்
நெடுஞ்சேரலாதன் வாழ்க அவன் கண்ணி.'

(2 ஆம் பத்து 10: 3-5)

44