பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருபது ஆண்டு இலங்கையை யரசாண்டார்கள் என்றும் அவர்கள் அஸ்ஸ (அசுவ-அசுவம்-குதிரை) வாணிகனின் மக்கள் என்றும் மகாவம்சம் என்னும் சிங்கள நாட்டு வரலாற்று நூல் கூறுகின்றது. சூரதிஸ்ஸன் என்னும் சிங்கள அரசன் இலங்கையை அரசாண்ட காலத்திலே சேனன், குட்டகன் என்னும் பெயருள்ள இரண்டு தமிழர் சூரதிஸ்ஸனை வென்று அரசாட்சியைக் கைப்பற்றி அனுராதபுரத்திலிருந்து நீதியோடு இருபத்தி இரண்டு ஆண்டுகள் அரசாண்டார்கள், இவர்கள் அஸ்ஸ (அசுவ) நாவிகனின் மக்கள் என்று மகா வம்சம் (XXI; 10-11) கூறுகிறது. இவர்கள் கி.மு. 177 முதல் 155 வரையில் இலங்கையை அரசாண்டார்கள்,

காலின் வந்த கருங்கறி மூடையும் என்பது காற்றின் உதவியினால் கப்பல்களில் கடல் வழியாகக் கொண்டுவரப் பட்ட கறி (மிளகு) மூட்டை . அக்காலத்தில் சிறந்த மிளகு சேர நாட்டு மலைச் சரிவுகளில்தான் உண்டாயிற்று. அதற்கு அடுத்தபடியாகச் சாவக நாட்டில் (ஜாவா சுமத்ரா தீவுகளில்) மிளகு உண்டாயிற்று. ஆனால், சாவக நாட்டு மிளகு சேர நாட்டு மிளகைப் போல அவ்வளவு சிறந்ததன்று. சேர நாட்டு மிளகை யவனர்கள் பெரிய நாவாய்களில் வந்து பெருவாரியாக வாங்கிக் கொண்டு போனபடியால் அது பற்றாக்குறைப் பொருளாக இருந்தது. ஆகவே கிழக்குக் கரைப் பக்கத்திலிருந்த சோழ நாட்டு வாணிகர் சாவக நாட்டிலிருந்து மிளகைக் கொண்டு வந்து விற்றார்கள். இந்த மிளகைத்தான் 'காலின் வந்த கருங்கறி மூடை' என்று கூறப்பட்டது. (கால்-காற்று, காலின் வந்த-காற்றின் உதவியினால் கப்பலில் வந்த.)

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் என்பன இமயமலைப் பக்கத்தில் கிடைத்த மணியும் பொன்னும். இவை வட இந்தியாவிலிருந்து கங்கையாற்றின் முகத்துவாரத்தின் வழியாகக் கடலில் வந்தவை.

குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் என்பன மேற்குத் தொடர்ச்சி மலைகளில் (சைய மலைகள்) உண்டான சந்தனக் கட்டை, அகிற் கட்டையாகும். இவை தெய்வங்களுக்கும் மகளிர் கூந்தலை உலர்த்துவதற்கும் அக்காலத்தில் பெரிதும்

77