பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


துறைமுகம்

கிழக்குக் கடற்கரையில் மிகப் பெரிய துறைமுக நகரமாகவும் காவிரிப்பூம்பட்டினம் விளங்கியுள்ளது. கடல் வழியே வரும் மரக்கலங்கள் கரையளவும் உள்ளே வந்து பண்டங்களை ஏற்றிச் செல்லவும் இறக்கவும் வாய்ப்புள்ள இயற்கைத் துறைமுகமாக விளங்கியிருக்கிறது. நகரமைப்பில் இது ஒரு சிறப்பாகும்.

... ... ... கூம்பொடு
மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங்கலம் தகாஅர்
இடைப்புலப் பெருவழிச் சொரியும்
கடல்பல் தாரத்த நாடுகிழ வோயோ74

என்னும் புறநானூற்றுப் பாடற்பகுதியிலிருந்து பல நாட்டுப் பண்டங்களை நிறைய ஏற்றிக்கொண்டு இத்துறைமுகத்தை நோக்கி வரும் பெரிய கப்பல்கள் பாய் மரங்களைக்கூடத் தாழ்த்தாமல் இந்நகரத்தின் கரையை அணுகிச் சரக்குகளை எளிதில் இறக்கின செய்தி தெரிய வருகிறது. நகரமைப்பின் இத்துறைமுக வசதி கடல் வாணிபத்திற்குப் பெரிதும் துணையாய் அமைந்திருந்தமை புலப்படுகிறது.

இரவில் திசையறியாது செல்லும் மொழி வேறுபட்ட தேயத்தாருடைய மரக்கலங்களை உரிய திசையில் வழிகாட்டி அழைக்கும் கலங்கரை விளக்கம் இந்நகரில் இருந்திருக்கிறது.75

நலம் கொழிக்கும் நகரமைப்பு

பூம்புகார் நகரமைப்பைப் பற்றி அறிஞர் சாமி சிதம்பரனார் கூறுகிறார்: பட்டினப்பாலை தோன்றிய காலத்தில் அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே காவிரிப்பூம்பட்டினம் மிகப்பெரிய நகரமாக இருந்தது. கடற்கரையோரத்தில் பாக்கங்கள் என்ற பெயரு