பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நா. பார்த்தசாரதி
37
 

கலைக்களஞ்சியங்களிலும்கூட இப்படியொரு விளக்கம் 'கோபுரம்' (Gopura) என்பதற்குத் தரப்பட்டுள்ளது.20

இருபதாம் நூற்றாண்டு சேம்பர் அகராதியிலும் இதே பொருள் கூறப்பட்டிருக்கிறது. (In southern india a Pyramidal tower over the gateway of a temple).21

நன்னூற் பாயிரத்திலும்கூட 'மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்'22 என இக்கோபுர அமைப்பு நகருக்கே நுழைவாயிலாகக் கூறப்பட்டிருத்தலைக் காணலாம். நூலுக்குப் பாயிரம் கோபுரம் போன்றது எனச் சொல்லுவதற்கான இப்பகுதி நன்னூலில் உவமையாக ஆளப்பட்டுள்ளது.

பேரறிஞர் பி.ஶ்ரீ. கட்டடக் கலை பற்றி பின்வருமாறு கூறுகிறார்:

'அரசர்களின் அரண்மனையைத்தான் கோயில் என்ற சொல் ஆதியில் குறித்திருக்க வேண்டும். பிறகு இது தெய்வ வழிபாட்டுக்குரிய இடங்களைச் சிறப்பாகக் குறிக்கலாயிற்று. சிற்ப நூல் வல்லுநர் கோயில்களையும் மண்டபங்களையும், மாட மாளிகைகளையும், உயர்ந்த மாடங்களில் அடுக்கு வீடுகளையும் நிலா முற்றங்களையும் தங்கள் கலைத்திறன் தோன்ற அமைத்தனர் என்று நெடுநல்வாடை முதலிய நூல்கள் தெரிவிக்கின்றன.

அழகான அரண்மனையை 'ஓவத்து அன்ன உருகெழு நெடுநகர்' - அதாவது 'ஓவியம்போல் அழகினையுடைய அரண்மனை’ என்கிறது பதிற்றுப்பத்து. 'ஓவியம் போல் அழகினையுடைய வீடு’ - என்று பொருள்படப் புறநானூறு பேசுகிறது.”23

இத்தகைய சிறப்புடைய தமிழர் கட்டடக் கலையில் எல்லாவற்றுக்கும் அடிப்படையான நம்பிக்கைகள்-பழக்க வழக்கங்கள், பின்பற்றிய மரபுகள் பற்றி முதலில் காணலாம்.

ப-3