பக்கம்:பழைய கணக்கு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தூக்கத்திலிருந்து தூக்கம் வரை...

னந்த விகடன் அலுவலகம் அப்போது பிராட்வேயில் இருந்தது. நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்திய கதை. கல்கி விகடனின் பொறுப்பாசிரியராக இருந்த காலம். துமிலன் தேவன், நாடோடி, கதிர், மாலி, தாணு இவர்களோடு சேர்ந்து பணி புரிந்த பொற்காலம். அன்றாடம் வருகிற சிறுகதைகளை அவ்வப்போது படித்து ஒவ்வொன்றுக்கும் கதைச் சுருக்கம் எழுதி வைக்க வேண்டிய பொறுப்பு என்னுடையது. நான் அப்போது ஒரு குட்டி உதவி ஆசிரியர்.

ஒருநாள் இரவு மினர்வா டாக்கீசில் நைட் ஷோ பார்த்து விட்டு மறுநாள் காலையில் ஏழரை மணிக்கே ஆபீசுக்குப் போய் விட்டேன். பத்து மணிக்குத்தான் ஆபீஸ் என்றாலும், படிக்க வேண்டிய கதைகள் பாக்கி சேர்ந்து போயிருந்ததால் கொஞ்சம் சீக்கிரமாகவே போய் விட்டேன். காலை வேளை, வயிற்றிலே இட்லி சாம்பார். பாஃன் காற்றில் அப்படியே தூங்கி விட்டேன். என் போதாத வேளை திரு வாசன் அவர்கள் அன்று பார்த்து ஆபீஸுக்குக் காலையிலேயே வந்திருக்கிறார். ஒவ்வொரு டிபார்ட்மெண்டாகப் போய் மேற்பார்வையிட்டிருக்கிறாா்.

என் அறைப் பக்கம் வந்தபோது நான் மேஜையில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு விட்டு என்னை எழுப்பாமலே போய் விட்டிருக்கிறார். அவ்வளவுதான். அன்று பகலே எனக்குச் சீட்டுக் கிழித்து விட்டார்கள்.

இரண்டாம் முறை நான் விகடனில் சேர்ந்த போது அதன் முழு நிர்வாகப் பொறுப்பையும் வாசனின் புதல்வர் திரு பாலசுப்ரமணியன் ஏற்றிருந்தார். என் நகைச்சுவைப் பேச்சிலும் எழுத்திலும் மிகுந்த ஆர்வம் காட்டி என்ன உற்சாகப்படுத்தியவர் பாலு அவர்கள்தான். ‘எடிடோரியல் டிஸ்கிஷன்’ அடிக்கடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/105&oldid=1146092" இலிருந்து மீள்விக்கப்பட்டது