பக்கம்:பழைய கணக்கு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107

சென்னை வரும்போதெல்லாம் என்னைக் கூப்பிட்டுப் பேசாமல் இருப்பதில்லை.

ஒரு சமயம் நான் கோவைக்குப் போயிருந்தபோது நாயுடு பங்களாவுக்குப் போன் செய்து அவரோடு பேசினேன். மறுநாள் காலை எட்டு மணிக்கு அவர் வீட்டில் சந்திப்பதாக முடிவானது. ஓட்டலிலேயே காலை டிபனை முடித்துவிட்டு அவருடைய பங்களாவுக்குப் போனேன். நான் உள்ளே நுழைந்த சமயம் அவர் ராமசாமிப் பெரியாரிடம் பேசிக் கொண்டிருந்தார். சற்று நேரத்துக்கெல்லாம் பெரியாரை வழி அனுப்பி வைத்து விட்டு என்னிடம் வந்து “வாருங்கள், சாப்பிடப் போகலாம்” என்று உள்ளே அழைத்தார்.

“நான் காலையிலேயே சாப்பிட்டாயிற்று! ஓட்டலிலேயே முடித்து விட்டேன்!” என்றேன்.

“அதெல்லாம் முடியாது. உங்களை யார் சாப்பிடச் சொன்னது? எட்டு மணிக்கு உங்களை வரச் சொன்னதே நாம் இருவரும் சேர்ந்து சாப்பிடலாம் என்பதற்குத்தானே? இங்கே இட்லி, உப்புமா எல்லாம் ரெடியாக இருக்கிறது. சாப்பிடாமல் நீங்கள் இந்த இடத்தை விட்டுப் போக முடியாது” என்று பிடிவாதம் பிடித்தார் நாயுடு.

“முடியவே முடியாது” என்றேன் நான்.

“அதெல்லாம் முடியாது; சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும்” என்றார் அவர். நானும் பிடிவாதத்தைத் தளர்த்த வில்லை.

“லண்டனில் பெரியார் ஒருமுறை இப்படித்தான் சாப்பிட முடியாது என்று பிடிவாதம் பிடித்தார். ஆனால் அவரை நான் விடவில்லை. பெரியாரையே சாப்பிட வைத்தவன் நான்” என்றார் நாயுடு பெருமையோடு.

“அதென்ன கதை” என்று கேட்டேன் ஆவலுடன்.

“லண்டன் போயிருந்த போது நான் தங்கியிருந்த ஓட்டலிலேயே பெரியார் ஈ.வெ.ராவும் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. அவருக்குப் போன் செய்து, “கீழே ரெஸ்ட்டாரண்ட்டுக்கு வந்து விடுங்கள், பேசலாம்” என்று சொல்லிவிட்டுக் கீழே போய் அவருக்காகக் காத்திருந்தேன். அவர் கீழே வத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/108&oldid=1146095" இலிருந்து மீள்விக்கப்பட்டது