பக்கம்:பழைய கணக்கு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

117

கூடாது. உடல் நிலை பாதிக்கப் பட்டிருந்தாலும் வந்தே தீர வேண்டும். திரிபுரா காங்கிரஸ் தலைமை ஊர்வலத்தின் போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸூக்குக் கடுமையான காய்ச்சல் வந்து விட்ட போதிலும் அவர் கடமையிலிருந்து தவறவில்லை” என்று சுட்டிக் காட்டியிருந்தேன்.

மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் கலந்து கொண்டது மட்டுமல்ல. மிகமிக அழகாகப் பேசி எனக்குப் பெரும் மதிப்பையும் பெருமையையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

“அருமை நண்பர் சாவி எனக்கு இன்று ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில், ‘நேதாஜி போஸ் கடுமையான காய்ச்சல் வீசிக் கொண்டிருந்த போதிலும் கடமையில் தவறவில்லை. அதைப் போல நீங்களும் இன்று தவறக் கூடாது, என்று எழுதியிருக்கிறார்.

“ஆனால் நேதாஜி போஸ் அன்று என்னைப் போல் வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கவில்லை என்பதை நண்பர் சாவி அவர்களுக்கு எடுத்துச் சொல்ல ஆசைப்படுகிறேன்” என்று கூறிய போதுதான் கலைஞரின் உண்மை நிலை புரிந்து வருத்தமுற்றேன்.

அந்த ஆண்டில்தான் என் மகன் பாச்சாவின் திருமணமும் நடந்தது. அன்று மாலை ஹேமமாலினியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த கலைஞர் பாச்சாவைப் பார்த்து, “பாச்சா, உன் பாச்சாவெல்லாம் இனி பலிக்காது” என்று வேடிக்கையாகச் சொல்லி விட்டு போட்டோவுக்கு நின்றுவிட்டு மறுகணமே பீச்சுக்குக் கிளம்பிவிட்டார். நான் கார் வரை சென்று வழி அனுப்பிய போது, “இன்று நீங்கள் பீச்சுக்கு வர முடியாது, இல்லையா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

“ஆமாம்” என்று பதில் கூறி விட்டேனே தவிர பீச்சுக்குப் போகாதது மனதுக்குச் சமாதானமாயில்லை.

ஏழரை எட்டு மணிக்கு மேல் கொஞ்சம் ரிஸப்ஷன் பரபரப்பு அடங்கியதும் கலியாணச் சீர்வரிசை பட்சணங்களைப் பைகளில் போட்டு எடுத்துக் கொண்டு யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் கார் ஏறி பீச்சுக்குப் போய் விட்டேன். என்னைக் கண்டதும் கலைஞருக்கு ஒரே வியப்பு!

“எப்படி வந்தீங்க?” என்பது போல் ஒரு பார்வை. அந்தப் பார்வையிலே சொல்லொனத மகிழ்ச்சி. வாய் நிறையச் சிரிப்பு. இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?

என் அறுபதுக்கு வந்து பாராட்டிய கலைஞருக்கு இன்று அறுபது! அவர் பல்லாண்டு வாழ உளமார வேண்டுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/118&oldid=1147335" இலிருந்து மீள்விக்கப்பட்டது