பக்கம்:பழைய கணக்கு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

மிகத் திறமைசாலி. ரெஃபரியாக இருந்து நியாயம் வழங்குவதில் வல்லவர்.

கிங்காங்கும் தாராசிங்கும் ஒருவரையொருவர் மலைப் பாம்புகளைப் போல் பிண்ணிக் கொண்டு பிடிவாதம் காட்டும் நேரங்களில் ரெஃபரி வாங் பக்லி கிங்காங் காதருகில் போய் அழுத்தமாக விசிலே ஊதுவார். அப்போதும் கிங்காங் தன் பிடியிலிருந்து தாராசிங்கை விட மாட்டார். தாராசிங் தலை முடியைப் பிடித்து இழுத்து ஃபெளல் கேம் ஆடுவார். வாங் பக்லிக்குக் கோபம் வரும். ஒரு ஜம்ப் செய்து கிங்காங் தோள் உயரத்துக்கு மேலே கிளம்பி அப்படியே தமது இரு கால்களாலும் கிங்காங்கை உதைத்துக் கீழே தள்ளிவிட்டுத் தானும் விழுவார். வாங் பக்லி அப்படி மேலே கிளம்பும்போது ஆகாயத்தில் பறப்பது போலிருக்கும். இந்த அபூர்வக் காட்சியைக் காண்பதற்காகவே பலபேர் டிக்கட் வாங்கிக் கொண்டு குஸ்தி பார்க்க வருவார்கள்.

நானும் சின்ன அண்ணாமலையும் ‘வானத்தில் பறக்கும் சீனத்து வீரர்’ என்று வாங் பக்லிக்கு ஒரு பெயர் சூட்டினோம்.

‘நண்டுப் பிடி’ என்பது சர்வதேச மல்யுத்த வகையில் ஒன்று. குஸ்தி போடும் போது எதிரியின் தலேமுடியைப் பிடித்து இழுக்கக் கூடாது என்பது விதி. கிங்காங் அடிக்கடி தாராசிங்கின் தலைமுடியைப் பிடித்து இழுப்பார். அப்போதெல்லாம் நான் ஒலிபெருக்கியில் “தாராசிங் போடுவதோ நண்டுப் பிடி. கிங்காங் போடுவதோ சிண்டுப் பிடி” என்பேன். எல்லோரும் சிரிப்பார்கள்!

“மல்யுத்தம் பார்ப்பதற்கு ஒரு சுவாரஸ்யமான விளையாட்டாக இருந்தால் மட்டும் போதாது, அதை ஒரு பரபரப்போடு நடத்த வேண்டும்” என்று நானும் சின்ன அண்ணாமலையும் விரும்பினோம். தினம் தினம் புதுப்புது உத்திகளைப் புகுத்தி வசூலைப் பெருக்குவதில் கவனம் செலுத்தினோம். இந்தக் கலையில் எங்களுக்குள்ள திறமை கண்டு கிங்காங்கே வியந்து போனார்!

ஒருநாள் கிங்காங்கைத் தனிமையில் சந்தித்து அன்று மாலை நடக்க வேண்டிய நிகழ்ச்சி பற்றி விவாதித்தோம். எங்கள் திட்டப்படி மூன்றாவது ரவுண்டில் கிங்காங் தாராசிங்கை வலுச் சண்டைக்கு இழுத்து, மேடையிலிருந்து தாராசிங்கைக் கீழே தள்ள வேண்டும். கீழே போய் விழும் தாராசிங் கோபமுற்று மேடை மீது தாவி கிங்காங்கைத் தனது இரண்டு கைகளாலும் உயரத் தூக்கித் தலைக்கு மேல் மூன்று முறை தட்டாமாலே சுற்றிக் கீழே போட வேண்டும். போட்டதும் கிங்காங் மீது அமர்ந்து அவர் நெற்றியில் ரத்தம் கசியும் அளவுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/12&oldid=1145659" இலிருந்து மீள்விக்கப்பட்டது