பக்கம்:பழைய கணக்கு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

பிந்தைய ரகத்தைச் சேர்ந்தவன். கச்சேரி ரோடு ஷட்டில் சர்விஸில் தினமும் நாலு முறையாவது போய்த் திரும்புவேன். அந்தப் பழக்கத்தில் நெற்றி முழுதும் படர்ந்த நாமம் போட்ட கண்டக்டர் நாயுடு எனக்கு ரொம்ப வேண்டியவராகி விட்டார். சின்னப் பையன் என்று ஒரு சலுகை காட்டினார். எப்போதாவது காலணாவுக்குப் பொடி வாங்கிக் கொண்டு போய்க் கொடுக்கும் போது அவரது முப்பத்திரண்டு பற்களையும் பார்த்துவிட முடியும்!

காலையில் சம்ஸ்கிருதக் கல்லூரிக்குப் போய் மடத்து யானை குளித்து முடிகிறவரை காத்திருந்துவிட்டு. அப்புறம் வெளியே போய் ஒரு ரவுண்ட் சுற்றிவிட்டு பகல் சாப்பாட்டுக்குத் திரும்பி வந்து விடுவேன். சுவாமிகளைத் தரிசிக்க வரும் பிராமணர்கள் எல்லோருக்குமே மடத்தில் பகல் சாப்பாடு உண்டு. யாருக்கு உண்டோ இல்லையோ எனக்கு நிச்சயம் உண்டு! அது தவிர எப்படியும் ஒரு நாளைக்கு நாலைந்து முறை சம்ஸ்கிருதக் கல்லூரிக்குப் போகாமல் இருக்க மாட்டேன். பெரியவரைப் பார்க்க வேண்டும் என்ற பக்திப் பரவசத்தால் அல்ல. அங்கே அவ்வப்போது கிடைக்கக் கூடிய பிரசாதத்தை இழந்து விடுவோமோ என்ற பயத்தில்!

விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தை அவ்வப்போது ஓடி வந்து அம்மாவைத் தொட்டுக் கொண்டு திரும்பவும் விளையாடப் போய் விடுமே. அது மாதிரி எந்த நிமிடம் எதை விநியோகம் செய்து விடுவார்களோ என்ற சந்தேகம்தான். யாராவது நிறையப் பழங்கள் கொண்டு வந்து பெரியவாளிடம் தட்டோடு வைப்பார்கள். அவர் திடீரென்று ‘இதைக் குழந்தைகளுக்கு வினியோகித்து விடு’ என்று உதவியாளர்களிடம் சொல்லுவார்.

சரி, இப்படியே எத்தனை நாளைக்கு வண்டி ஒட்டுவது? படிப்பும் அதிகமில்லை. வேலை கிடைப்பதாகவும் தெரியவில்லை.

ஒருநாள் கச்சேரி ரோடில் இருந்த போலீஸ் ஸ்டேஷனில் ஒரு போர்டு காணப்பட்டது. போலீஸ் வேலைக்கு ஆள் எடுக்கப்படும் என்று அதில் எழுதப்பட்டிருந்தது.

என்னை ஒரு தரம் நானே மானசீகமாய்ப் பார்த்துக் கொண்டேன். எனக்கு போலீஸ் உத்தியோகத்துக்குத் தகுந்த உயரம் இருந்தது. அது மட்டுமல்ல. என் தாத்தாவுக்கு அப்பாவோ வேறு யாரோ ஒருவர் எங்கள் குடும்பத்தில் போலீஸில் உத்தியோகம் பார்த்ததாக என் பாட்டி சொல்லியிருக்கிறாள். ஆகவே அவரைப் போல் போலீஸ் உத்தியோகம் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஓர் ஆர்வம் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/123&oldid=1146114" இலிருந்து மீள்விக்கப்பட்டது