பக்கம்:பழைய கணக்கு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

செய்தது கிடையாது. என்றாவது ஒரு நாள் அதில் பயணம் செய்து பார்த்து விடவேண்டுமென்று விரும்பினேன்.

ஒருநாள் அப்பாவுக்குத் தெரியாமல் களத்திலிருந்து கொஞ்சம் வேர்க்கடலையை வாரி எடுத்துத் துணியில் மூட்டை கட்டிக் கொண்டு போய் பல சரக்குக் கடையில் விற்று இரண்டணா தேற்றிக் கொண்டேன். பஸ் வருகைக்காக அந்த ரோடு ஓரத்தில் போய்க் காத்திருந்தேன் தூரத்தில் பஸ் வருவது தெரிந்ததும் கையை வீசி நிறுத்தும்படி அபிநயம் செய்தேன்.

நின்றது.

“எங்கே போவனும் தம்பி?” கண்டக்டர் கேட்டார்.

“ரெண்டணா வச்சிருக்கேன். அதற்கு எங்கே கொண்டு போய் விட முடியுமோ. அங்கே விட்டுவிடு” என்றேன்.

“ஏறிக்கொள்” என்றார்.

மூன்று மைல் தொலைவிலுள்ள மாமண்டூர் கிராமம்வரை கொண்டு போய் விட்டார். ஜன்ம சாபல்யம் தீர்ந்தது. அங்கிருந்து நடந்தே திரும்பி வந்து சேர்ந்தேன். இந்த இடை வேளையில் என் அப்பா களத்துக்கு வந்து பார்த்திருக்கிறார், சவாரிக் கூண்டில் என்னைக் காணாமல் திடுக்கிட்டுப் போயிருக்கிறார். சுற்று முற்றும் தேடிப் பார்த்திருக்கிறார். “பையனுக்கு என்ன ஆபத்தோ? எங்கே போனானோ?” என்று பயந்து போய் குளம் குட்டைகளெல்லாம் வலை வீசியிருக்கிறார். கடைசியில் நான் மாமண்டூரிலிருந்து நடந்தே வருவதைக் கண்டு விட்டு “எங்கே போயிருந்தாய்?” என்று கேட்டாா்.

நான் உண்மையைச் சொல்லிவிட்டேன். உண்மை பேசியதற்காக எனக்கு அன்று கிடைத்த சன்மானம் என்ன தெரியுமா? செம்மையான உதைதான்! புளியமிலாறு பிய்ந்து விட்டது. முதுகெல்லாம் ரணம்! அழுது அழுது கண்கள் வீங்கிப் போயின.

அப்பா அடித்துத் துன்புறுத்தியதால் அந்த விரக்தியில் மனம் முறிந்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டைவிட்டே போய் விட்டேன். சென்னையை இலக்காக வைத்து என் பாதயாத்திரையைத் தொடங்கினேன். முதலில் குப்படிச்சாத்தம், (தி. மு. க. ஆற்காடு வீராசாமியின் கிராமம்) அப்புறம் கலவை, அப்புறம் ஆற்காடு-ஆற்காட்டில் உறவினர் வீட்டில் ஒருநாள் தங்கிவிட்டு, இரண்டாவது கட்டமாக சென்னை நோக்கிப் பயணம்— இதுதான் என் திட்டம்.

இடுப்பில் ஒரு வேட்டி. தோள் மீது காசிப்பட்டுத் துண்டு. ஆறு மைல் தூரத்திலுள்ள கலவையைத் தாண்டி ஆற்காடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/139&oldid=1146130" இலிருந்து மீள்விக்கப்பட்டது